Published : 15 Dec 2023 05:17 AM
Last Updated : 15 Dec 2023 05:17 AM

விபத்து இல்லாத ரயில் பயணத்தை உறுதிசெய்யும் நோக்கில் ‘கவச்’ தொழில்நுட்பம்: தெற்கு ரயில்வே திட்டம்

சென்னை: தமிழகத்தின் முக்கியமான வழித்தடங்கள் உட்பட தெற்கு ரயில்வேயில் 474 கி.மீ. தொலைவுக்கு தானியங்கி ரயில் பாதுகாப்பு முறையான ‘கவச்’ தொழில்நுட்பத்தை நிறுவ ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

‘விபத்து இல்லாத ரயில் பயணம்’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின்கீழ் ‘கவச்’ எனப்படும் பாதுகாப்பு முறை உருவாக்கப்படும் என்று கடந்த 2021-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. கவச் (கவசம்) தொழில்நுட்பம் என்பது தானியங்கி ரயில் பாதுகாப்பு முறை ஆகும். ரயில்வேயின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு (ஆர்டிஎஸ்ஓ) வாயிலாக 3 இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது.

ஆபத்து நேரங்களில் சிக்னல்களை தாண்டும்போது, ரயில் ஓட்டுநர்களுக்கு உதவும் வகையிலும், ரயில் ஓட்டுநர்கள் செயல்பட தவறும்பட்சத்தில் தானாகவே பிரேக்போடும் வகையிலும், அடர்ந்த மூடுபனி போன்ற பாதகமான வானிலையின்போது உதவும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ரயில்களின் வேகம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், விரைவு ரயில்கள் அதிகம் இயக்கப்படும் வழித்தடங்களில் இந்த அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்ப வசதியை படிப்படியாக கொண்டு வருவதும் அவசியமாகிறது.

அதன்படி, நாட்டின் முக்கியவழித்தடங்களில் கவச் தொழில்நுட்பத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தெற்கு ரயில்வேயில் 474 கி.மீ.தொலைவுக்கு (இரு மார்க்கத்திலும்) இந்த தொழில்நுட்பத்தை நிறுவ ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

ஜோலார்பேட்டை - சேலம் - ஈரோடு, விழுப்புரம் - காட்பாடி, கரூர் - திண்டுக்கல், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு, மதுரை - கன்னியாகுமரி, சொரனூர் - சேலம், ஈரோடு - கரூர் ஆகிய வழித்தடங்களில் கவச் தொழில்நுட்பம் நிறுவதிட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், அரக்கோணம் - ரேணிகுண்டா, சென்னை சென்ட்ரல் - கூடூர் ஆகியவை அதிக அடர்த்தி கொண்ட வழித்தடங்கள் என்பதால், இங்கும் இந்த தொழில்நுட்பத்தை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

தானியங்கி சிக்னலிங் முறை: முதல்கட்டமாக, 2025-26-ம் நிதிஆண்டில் நிறுவும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதற்காக, தானியங்கி சிக்னலிங்முறை, வழித்தடங்கள், யார்டுகள் உள்ளிட்டவற்றில் என்ன மாற்றம்செய்யப்பட வேண்டும் என்பதைகண்டறிய ஒரு அமைப்பை நிறுவுவது போன்ற ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x