Last Updated : 09 Nov, 2023 04:48 PM

 

Published : 09 Nov 2023 04:48 PM
Last Updated : 09 Nov 2023 04:48 PM

“முடிந்த கதை தொடராது... அதிமுக - பாஜக கூட்டணி எதிர்காலத்தில் அமையாது” - ஜெயக்குமார் உறுதி

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

புதுச்சேரி: “அதிமுக - பாஜக கூட்டணி எதிர்காலத்தில் அமையாது; முடிந்த கதை தொடராது” என்று அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் கூறினார்.

புதுச்சேரியில் தனியார் மருந்து நிறுவன விபத்தைக் கண்டித்து புதுவை அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "புதுச்சேரி காலாப்பட்டு தனியார் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து வெளிமாநில நிபுணர்கள் குழுவை அமைத்து விசாணை நடத்த துணைநிலை ஆளுநர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விசாரணை அறிக்கை அடிப்படையில் மக்கள் கோரிக்கையை ஏற்று நிறுவனத்தை மூட வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்னையை, புதுச்சேரி மருந்து நிறுவனப் பிரச்னையுடன் சம்பந்தப்படுத்தக் கூடாது.

அதிமுகவின் கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகவே அவர் அதிமுக கரை வேட்டியைக் கூட பயன்படுத்தக் கூடாது. அதிமுக சம்பந்தப்பட்ட கரைவேட்டி, கொடி, சின்னத்தை பயன்படுத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும். சசிகலா தரப்புக்கும் இது பொருந்தும். சசிகலாவும் எங்கள் கொடி, சின்னம், பெயரை பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளோம்.

அதிமுக தொண்டர்கள் கோயிலாக கருதிய கட்சி அலுவலகத்தை சேதப்படுத்தியவர் ஓ.பன்னீர்செல்வம். ஆகவே, அவர் கட்சியில் இருக்கக் கூடாது என்பதே தொண்டர்கள் விருப்பம்.
அதிமுக, பாஜக கூட்டணி மீண்டும் ஏற்படும் என தமாக தலைவர் ஜி.கே.வாசன் கூறியிருப்பது அவரது கருத்தாகும். ஆனால், அதிமுக, பாஜக கூட்டணி என்பது முடிந்துபோன அத்தியாயம். மக்களவைத் தேர்தலில் மட்டுமல்ல, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவானது பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஆகவே, எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமையாது. முடிந்த கதை தொடராது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x