Published : 07 Nov 2023 08:11 AM
Last Updated : 07 Nov 2023 08:11 AM
சென்னை: சனாதனத்தின் பாதுகாவலர் என்று சொல்லக்கூடிய நபர் விரும்பத்தகாத வார்த்தைகளை சமூக வலைதளங்களில் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரங்கராஜன் நரசிம்மனுக்கு ரூ.2000 அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை காணாமல்போன விவகாரம் தொடர்பாக தொழிலதிபர் வேணு சீனிவாசனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யக் கூடாது என ரங்கராஜன் நரசிம்மனுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்த உத்தரவை மீறி தொடர்ந்து சமூக வலைதளங்களில் விரும்பத்தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாகக் கூறி, வேணு சீனிவாசன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
ரங்கராஜன் நரசிம்மனுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படுகிறது. அந்தத் தொகையை 4 வாரங்களில் செலுத்த வேண்டும். சனாதனத்தின் பாதுகாவலர் என்று கூறிக்கொள்ளும் நபர், சமூக வலைதளங்களில் விரும்பத்தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. அதை ஊக்குவிக்க முடியாது. சமூக வலைதளங்களில் நாகரிகத்தையும், கண்ணியத்தையும் பேண வேண்டிய அவசியத்தை உணர்த்த இரண்டு வாரங்களுக்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் இருந்து அவர் விலகி இருக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT