Published : 07 Nov 2023 05:32 AM
Last Updated : 07 Nov 2023 05:32 AM

கணை ஏவு காலம் 27 | காலமும் காட்சியும் @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

கோப்புப்படம்

யாரும் எதிர்பார்க்கவில்லை. ஷேக் அகமது யாசின் மட்டும் உயிருடன் இருந்திருந்தாரென்றால் இஸ்மாயில் ஹனியாவின் அந்த பதிலுக்காகவே நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சரிந்திருப்பார். அவ்வளவு ஏன், இஸ்மாயில் ஹனியாவே அந்த பதிலைக் கண்ணாடி முன் நின்று தனக்குத் தானே சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தார் என்றால், தனக்கு வேறு யாரோ டப்பிங் பேசுகிறார்கள் என்றுதான் நினைத்திருப்பார். காலம். சூழ்நிலை. பதவி - பொறுப்பு. அரசியல். ஜனநாயகம். இனி ஒரு போராளி இயக்கத் தலைவராக அவரால் பேச முடியாது. பாலஸ்தீன் அத்தாரிடியின் பிரதமர் அல்லவா?

யுத்தத்துக்கெல்லாம் வாய்ப்பும் இல்லை, அவசியமும் இல்லை. இப்ராஹிம் கைதுக்கு ஹமாஸ்தனது எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிப்படுத்தும். தவிர, அடக்குமுறை நமக்குப் புதிதல்ல. அத்துமீறல் இஸ்ரேலுக்கும் புதிதல்ல.

இதுதான் இஸ்மாயில் ஹனியா அன்று சொன்ன கருத்து. காஸா பிராந்தியத்து மக்கள்குழம்பிப் போனார்கள். உண்மையிலேயே சொல்லியிருப்பது ஹனியாதானா அல்லது வேறு யாராவதா என்று கேட்காதவர்கள் கிடையாது.

ஆனால் அவர்களுக்குக் கூடத்தெரியாமல் ஹனியா வேறொரு காரியத்தைச் செய்து விட்டுத்தான் மேற்படி அறிக்கையை வெளியிட்டிருந்தார். அது, மேற்குக் கரையில் இருந்த அத்தனை ஹமாஸ் வீரர்களையும் இரவோடு இரவாகத் தலைமறைவாக வைத்தது.

இப்ராஹிம் ஹமீத் கைதாகிவிட்ட தகவல், அது நடந்த 10-வது நிமிடத்தில் ஹனியாவுக்குத் தெரிந்து விட்டது.சற்றும் தாமதிக்காமல் அன்றே, அப்போதே மேற்குக் கரையில் தங்கியிருந்த ஹமாஸ் உறுப்பினர்கள் அத்தனை பேரையும் தலைமறைவாகிவிடச் சொல்லிவிட்டார். அவருக்கு மிக நன்றாகத் தெரியும். பொழுது விடிந்து இப்ராஹிம் ஹமீதை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மறுகணமே மேற்குக் கரை முழுதும் இஸ்ரேலியப் படைகள் தேடத் தொடங்கிவிடும். பிறகு ஒருவரைக் கூட விட்டு வைக்க மாட்டார்கள். அது நடக்கக் கூடாதென்றால் விடிவதற்கு முன்னால் இந்நடவடிக்கையை முதலில் எடுத்தாக வேண்டும்.

இஸ்மாயில் ஹனியாவால் இப்ராஹிமைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் அவரைத் தவிர வேறு யாரையும் இஸ்ரேல் போலீஸ் கைது செய்யமுடியாதபடி பார்த்துக் கொள்ள முடிந்தது. சம்பவம் நடந்த கணம் தொடங்கிஅடுத்த 6 நாட்களுக்கு மேற்குகரை முழுதும் மொசாடும்இஸ்ரேல் சிறப்புப் பாதுகாப்புப் படையினரும் இண்டு இடுக்கு விடாமல் சல்லடை போட்டு சலித்துப் பார்த்தார்கள். உண்மையிலேயே அவர்களுக்கு ஒரே ஒரு ஹமாஸ் வீரர் கூடக் கிடைக்கவில்லை.

இது எப்படிச் சாத்தியம் என்றுகுழம்பிப் போனார்கள். ஏனெனில், ரெய்டு தொடங்கும் போதே எல்லைகளை அவர்கள் சீல் செய்திருந்தார்கள். அதாவது மேற்குக் கரையிலிருந்தோ கிழக்கு ஜெருசலேத்தில் இருந்தோ யாரும் இஸ்ரேலியக் காவல் துறையின்அனுமதியின்றி வெளியேற முடியாது.அந்தப் பக்கம் ஜோர்டனுக்கோ வேறெங்காவதோ தப்பிச் செல்லவும் முடியாதபடி எல்லைக் காவல் படையினரையும் முடுக்கிவிட்டிருந்தார்கள். இவ்வளவுக்கு பின்பும் எப்படி மேற்குக் கரையில்இருந்த ஹமாஸ் வீரர்கள் (குறைந்தது 1,300 பேர் என்று சொல்வார்கள். ஆனால்இது துல்லியமான கணக்கல்ல.) ஒரே இரவில் காணாமல் போயிருக்க முடியும்?

இன்றைக்கு ஹமாஸின் சுரங்க வழித் தடங்களைப் படம் வரைந்து பாகம்குறிக்கிறார்கள். வெறும் 40 கிலோ மீட்டர் நீளமே உள்ள காஸாவில் அவர்கள்500 கிலோ மீட்டருக்கு பாதாள உலகம்படைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். புகைப்படங்களும் விடியோக்களும் போட்டி போட்டுக் கொண்டு வெளியாகின்றன.

இதுகுறித்துப் பின்னால் விரிவாகப் பார்க்கப் போகிறோம். இப்போது இரண்டாவது இண்டிஃபாதாவை முடித்து வைத்துவிடலாம்.

முன்சொன்னபடி இரண்டு பெருந்தலைவர்களின் மரணங்கள் அதற்குக் காரணம். இந்தப் பக்கம் ஷேக் அகமதுயாசின். அந்தப் பக்கம் யாசிர் அர்ஃபாத்.இதில் யாசினை இஸ்ரேல் கொன்றவிதம் நியாயமாக 3-வது இண்டிஃபாதாவுக்கே வழி வகுத்திருக்க வேண்டும். அவ்வளவு மோசமான நடவடிக்கை அது. அவரைக் கைது செய்ய பல்வேறுவிதங்களில் தொடர்ந்து முயற்சி செய்து முடியாது போன நிலையில், எப்போது அவர் ஆயுததாரிகளான காவலர்கள் உடன் இல்லாமல் இருப்பார் என்று யோசித்திருக்கிறார்கள். தொழுகை நேரம் மட்டும்தான் சாத்தியம் என்று தெரிந்திருக்கிறது. அவர் தொழச் செல்லும் மசூதியைக் கண்டறிந்து, காத்திருந்து ராக்கெட் ஏவிக் கொன்றுவிட்டார்கள். யாசிர் அர்ஃபாத்தைக் கொல்லவும் இஸ்ரேல் ஏராளமான முறை முயற்சி செய்திருக்கிறது. ஆனால் அவர் இறந்தது உடல்நலக் குறைவால்தான்.

இந்த இரண்டு தலைவர்களின் மரணத்துக்குப் பிறகுதான் பாலஸ்தீனத்தின் அரசியல் வேறு முகம் கொள்ளத் தொடங்கியது.

(தொடரும்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x