Published : 16 Oct 2023 12:04 PM
Last Updated : 16 Oct 2023 12:04 PM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குழித்துறை பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டதால், ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் மாலையில் தொடங்கி விடிய விடிய கனமழை பெய்தது. மாம்பழத்துறையாறு அணைப்பகுதியில் அதிகபட்சமாக 170 மி.மீ. மழை பதிவானது.
திற்பரப்பு அருவியில் தண்ணீர் கரைபுரள்கிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு நேற்று 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக பெருஞ்சாணி அணை அடைக்கப்பட்டுள்ளது. சிற்றாறு 1, சிற்றாறு 2 அணைகள் நிரம்பி வருகின்றன. சிற்றாறு 1 அணையில் இருந்து 537 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரள்கிறது.
தாமிரபரணி ஆறு உட்பட கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குழித்துறை ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தரைப் பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. குழித்துறை, கோதை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. களியல் - கடையால் செல்லும் சாலை, குழித்துறை - ஆலஞ்சோலை சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
அணைகள் நிலவரம்: பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 37 அடியாக இருந்தது. அணைக்கு 1,487 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 65.35 அடியாக இருந்தது. அணைக்கு 723 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. சிற்றாறு 1 அணை நீர்மட்டம் 16.76 அடியாக இருந்தது.
அணைக்கு 1,158 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து உபரி நீராகவும், மதகுகள் வழியாகவும் 737 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 16.86 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 618 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பொய்கை அணை நீர்மட்டம் 9 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 43.14 அடியாகவும் இருந்தது.
முக்கடல் அணையின் நீர்மட்டம் 17.30 அடி யாக இருந்தது. பொது மக்கள் யாரும் ஆறுகளில் குளிக்க வேண்டாம் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குழித்துறை பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. ரயில்வே ஊழியர்கள் மண் சரிவை சீர்செய்தனர். மண் சரிவால் பரசுராம் எக்ஸ்பிரஸ், மதுரை-புனலூர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT