Published : 16 Oct 2023 05:31 AM
Last Updated : 16 Oct 2023 05:31 AM

92-வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் குடியரசு தலைவர் கலாம் படத்துக்கு மரியாதை: ஆளுநர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து செய்தி

படம்: எக்ஸ்

சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 92-வது பிறந்தநாளையொட்டி, அவரது படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 92-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அருகே அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி, திருவள்ளூர் ஓபசமுத்திரத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து அப்துல்கலாமின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதற்கிடையே பல அரசியல் கட்சி தலைவர்கள் அப்துல்கலாமின் பிறந்தநாளுக்கு வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

ஆளுநர் ஆர்.என்.ரவி: விழித்தெழுந்த பாரதத்தின் பிரகாசமிக்க அடையாளமான ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பிறந்தநாளில், அவருக்கு பணிவான மரியாதை செலுத்துவோம். சுயசார்பு பாரதத்தை உருவாக்குவதற்கும் நமது இளைஞர்களை ஊக்கப்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டதுதான் அவரது வாழ்க்கை.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: இந்திய தேசத்தின் சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு மாணவனின் கனவிலும்,அக்னி சிறகுகளை விதைத்தவரும், விஞ்ஞானம் போற்றும் ஏவுகணை நாயகனுமான மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துகலாமின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: யாராகினும் கல்வியால் எந்நிலையும் மாற்றி, உயர்ந்த நிலையை அடைய முடியும் என நிரூபித்து காட்டிய நாயகன் அப்துல்கலாம். விஞ்ஞானத்தில் நாட்டின் புகழை விண்ணைத் தொட செய்தவர். மாணவர்களுக்கு என்றும் ஆகச் சிறந்த வழிகாட்டி. இந்நாளில் அவரது புகழை போற்றி வணங்குகிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: சாதி, மத பேதமின்றி அனைவருடனும் அன்புடன் பழக கூடியவரும், கடவுள் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை கொண்டவர். இளைஞர்களின் எதிர்கால நட்சத்திரமாக விளங்கியவர். அவரது தன்னலமற்ற பணியும், சேவையும் இப்பூமி உள்ளவரை நிலைத்து நிற்கும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: பாரதத்தின் பெருமைக்குரிய மைந்தன், ஏவுகணை நாயகன் அப்துல்கலாமின் புகழை, அவரது பிறந்தநாளில் போற்றி வணங்குகிறேன். அவரது வாழ்க்கை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் என்றும் ஒரு வழிகாட்டி.

திக தலைவர் கி.வீரமணி: கட்சி, மதம், சாதி வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து மக்களாலும் நேசிக்கப்பட்டவர். அவரது பிறந்த நாளுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய சிலையைத் திறந்து வைத்திருப்பது பாராட்டத்தக்கது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் நல்வழியை காட்டும் அப்துல்கலாமின் லட்சியப் பாதையில் சென்று அவரதுகனவான வளமான இந்தியாவை உருவாக்குவோம் என அவர் பிறந்தநாளில் உறுதியேற்போம்.

திருவொற்றியூரில் சமத்துவ மக்கள் கழக தலைமை அலுவலகத்தில், அப்துல்கலாமின் படத்துக்கு, கட்சியின் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x