சட்டப்பேரவை ஹைலைட்ஸ் முதல் இருளில் மூழ்கும் காசா வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.11, 2023 

சட்டப்பேரவை ஹைலைட்ஸ் முதல் இருளில் மூழ்கும் காசா வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.11, 2023 
Updated on
2 min read

“தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்”: தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர். எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் வேளாண் அறிவியலில் பயிர்ப்பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலை பெறும் மாணவருக்கு டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கை”: “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில், குறிப்பாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி, இந்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்” என்று முக்கொம்பு சம்பவம் குறித்த கவன ஈர்ப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். முன்னதாக திருச்சி மாவட்டம், முக்கொம்பு சுற்றுலாத் தலத்தில் பெண் ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்ட காவலர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

“சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும்”: "ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 3 பேர் நீக்கம் குறித்து 10 முறை கடிதம் கொடுத்தும், சபாநாயகர் எங்களது கோரிக்கையை ஏற்க மறுக்கிறார். சபாநாயகர் இருக்கை ஒரு புனிதமான ஆசனம். அதில் அமர்ந்து அவர் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும்" என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

முன்னதாக ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரை பதவிநீக்கம் செய்ய வேண்டும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சபாநாயகர் ஏற்காததால், சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வரி பகிர்வு: மத்திய அரசு மீது தமிழக அரசு குற்றச்சாட்டு: "நிதியாண்டு 2014-15 முதல் 2021-22 வரை, மத்திய அரசின் நேரடி வரியில், தமிழகத்தின் பங்களிப்பு மட்டும் ரூ.5.16 லட்சம் கோடி. ஆனால், வரி பகிர்வாக இந்த காலக்கட்டத்தில் தமிழகத்துக்கு கிடைத்தது வெறும் ரூ.2.08 லட்சம் கோடிதான். இதே பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நிலைமைகள் வேறாக இருக்கிறது" என்று சட்டப்பேரவையில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“சந்திர பிரியங்கா புகார் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிக”: “புதுச்சேரி பெண் அமைச்சர் சந்திர பிரியங்காவின் புகார் குறித்து வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே “புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்காவின் பதவி பறிப்பு குறித்த காரணத்தை முதல்வர் ரங்கசாமி வெளிப்படையாக தெரிவிக்காமல் மவுனமாக உள்ளது ஏன்?” என்று காங்கிரஸ் மாநிலத் தலைவரும், எம்.பி.யுமான வைத்திலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, புதுச்சேரியின் ஒரே பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். சாதி ரீதியாகவும், பாலின ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளானதாக தான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டார். பெரும்பான்மை மக்களுக்கு துரோகம் செய்யவேண்டாம் என்றும் முதல்வருக்கு அவர் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

போர் தீவிரம் - இருளில் மூழ்கும் காசா: ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் புதன்கிழமை பிற்பகல் வரை இஸ்ரேலில் 1,055-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 3,000 பேர் காயமடைந்துள்ளனர். காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; சுமார் 5,000 பேர் காயமடைந்துள்ளனர்.

காசாவில் செயல்பட்டுவந்த ஒரே மின் உற்பத்தி நிலையத்தில் சில மணி நேரங்களில் எரிபொருள் தீர்ந்துவிடும் எனச் சொல்லப்பட்டிருப்பதால் காசா நகரம் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மின் விநியோகம் பல பகுதிகளில் தடைப்பட்டிருப்பதால் காசா மருத்துவமனைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், போரில் காயமடைந்தவர்களை காப்பாற்ற மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களை பயன்படுத்த பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, காசா மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 9 ஐ.நா ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சி இதை உறுதிப்படுத்தியுள்ளது

காசா குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தவில்லை: இஸ்ரேல்: காசாவில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும், ஹமாஸ் தீவிரவாதிகள் உள்ள கட்டிடங்களை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்படுவதாகவும் இஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

எங்கள் கட்டுப்பாட்டுக்குள் காசா எல்லைகள் - இஸ்ரேல்: இஸ்ரேல் - ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் 5-வது நாளை எட்டியுள்ளது. காசா மீதான வான்வழித் தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் அதிகமான துருப்புகளை தெற்கு இஸ்ரேல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது. கனரக ராணுவத் தளவாடங்களுடன் ரிசர்வ் படைகளும் அழைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், காசா எல்லைப் பகுதிகளின் கட்டுப்பாட்டை மீட்டுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய நிலுவை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் எனப்படும் 100 நாள் வேலை திட்டத்தில், பல மாதங்களாக விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நிதி வரவில்லை. இதனால் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு ஊதியம் நிலுவையில் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in