Published : 11 Oct 2023 04:19 PM
Last Updated : 11 Oct 2023 04:19 PM

100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய நிலுவை: மத்திய அரசின் பாராமுகமும், சுருங்கிய வேலை நாட்களும்!

திருப்பூர்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் எனப்படும் 100 நாள் வேலை திட்டத்தில், பல மாதங்களாக விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்கள் கூறியதாவது: கிராமப்புற மக்களுக்கு, அரசு தரப்பில் தொடர்புடைய கிராமத்திலேயே வழங்கும் வேலையாக இதனை கருதுகிறோம். 100 நாள் வேலை திட்டம் என்பது தற்போது படிப்படியாக குறைந்து இன்றைக்கு ஆண்டுக்கு 50 முதல் 60 நாட்கள் வேலை இருந்தாலே பெரிய விஷயம் என்றாகிவிட்டது. படிப்படியாக வேலை நாட்களின் எண்ணிக்கை சுருங்கியதால் வருவாயும் குறைந்துவிட்டது.

பணி நாட்களில் நாளொன்றுக்கு ரூ.250 மட்டும் வழங்கப்படுகிறது. மாதத்தில் 10 நாட்கள் கூட பணி இல்லை. அதிலும் பல மாதங்களாக ஊதியத்தை நிறுத்தி வைப்பதால், சொற்ப வருவாயை நம்பியுள்ள பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இ.ஜோதிபாசு கூறும்போது, “தொங்குட்டிபாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஆயிரம் பயனாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு கடந்த 7 வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. பெண்கள், வயதானவர்கள் அன்றாட செலவுக்கே சிரமப்படுவதை கிராமப்புறங்களில் பார்க்கிறோம். எனவே, நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளோம்” என்றார்.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.பஞ்சலிங்கம் கூறியதாவது: ஆண்டுக்கு 100 நாள் வேலை என்பது படிப்படியாக சுருங்கி, இன்றைக்கு ஆண்டுக்கு 50 முதல் 65 நாட்கள் தான் வேலை நடக்கிறது. குளம், குட்டை உள்ளிட்ட கிராமப்புற நீர்நிலைகளை தூர்வாருவது, சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகள்தான் இதன் அடிப்படை.

அதேபோல, சிறு குறு விவசாய தோட்டங்களில் பெண்களும் விவசாய பணி செய்வார்கள். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஒரு மாதம் தொடங்கி 4 மாதம் வரை சம்பளத்தொகை நிலுவை வைக்கப்பட்டுள்ளது. தற்போது பண்டிகை காலம் நெருங்குவதால், கிராமப்புறங்களில் பெண்கள் தங்களுக்கான ஒரு சேமிப்பாக இந்த தொகையை கருதுவார்கள்.

ஆனால், அதிலும் மாதக்கணக்கில் இழுத்தடிப்பதால் பெரும் சிரமத்துக்கு உள்ளாவதை காண்கிறோம். இதனை தொடர்புடைய வட்ட வளர்ச்சி அலுவலர்களும் கண்டுகொள்வதில்லை. தமிழ்நாட்டிலேயே திருப்பூர் மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்துக்கான அட்டை பெறப்பட்டுள்ளது. அதாவது 2 லட்சத்து 24 ஆயிரத்து 254 அட்டைகள் பெறப்பட்டுள்ளனர். ஆனால், 2021-22-ம் ஆண்டில் 8 ஆயிரம் அட்டைதாரர்களும், 2022-23-ம் ஆண்டில் 11 ஆயிரம் பேரும் பயன்பெற்றுள்ளனர். எஞ்சியவர்களுக்கு வேலை இல்லாத சூழல் தான் உள்ளது.

குறைவான எண்ணிக்கையில் வேலை பார்த்தவர்களுக்கே, ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதுதான் விநோதம். மத்திய அரசின் பாராமுகத்தால், இந்த திட்டம் முழுமையாக குலைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மத்திய பட்ஜெட்டிலும் நாடு முழுவதுக்குமான நிதி ஒதுக்கீடு, இந்த திட்டத்துக்கு மிக சொற்பம்தான். 2022-23-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையின்போது, ரூ.98 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

திருப்பூர் அருகே பெருமாநல்லூர் பகுதியில் தேசிய
ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் பணிபுரியும்
விவசாய கூலித் தொழிலாளர்கள்.

தற்போது, 2023-24-ம் நிதி ஆண்டில் ரூ. 60 ஆயிரம் கோடியாக நிதி சுருங்கியுள்ளது. படிப்படியாக திட்டத்தை பாழாக்கும் வேலையைத்தான் மத்திய அரசு செய்து வருகிறது. ஆனால், வேளாண் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் கோடி நிதி ஒதுக்கினால் மட்டுமே இந்த திட்டம் முழுமையாக அனைவரையும் சென்றடையும் என்கிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் மாறாக, தற்போது இவர்களின் பணியை கண்காணிக்கஊதிய ஒதுக்கீடுக்கான நிதியில் இருந்தே, ட்ரோன் கேமராக்கள் உள்ளிட்டவற்றை வாங்கியிருப்பது, கிராமப்புற திட்டத்தை நாசம் செய்யும் வேலை. திட்டத்தை சீர்படுத்த விரைவில் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்” இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் நிதி வரவில்லை. இதனால் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு ஊதியம் நிலுவையில் உள்ளது. வரும் வாரத்தில் மத்திய அரசு ஒதுக்கிவிட்டால், அவற்றை உடனடியாக வட்ட வளர்ச்சி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்கள் மற்றும் வேலை செய்யும் திறன் உள்ள அனைவரும் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி உள்ளவர்கள் தான். ட்ரோன் உள்ளிட்டவை நம் மாவட்டத்துக்கு இன்னும் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x