Published : 11 Oct 2023 01:18 PM
Last Updated : 11 Oct 2023 01:18 PM

காசா எல்லைகள் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

டெல் அவிவ்: காசா எல்லைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் 5-வது நாளை எட்டியுள்ளது. இந்தநிலையில் காசா மீதான வான்வழித் தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் அதிகமான துருப்புகளை தெற்கு இஸ்ரேல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது. கனரக ராணுவத் தளவாடங்களுடன் ரிசர்வ் படைகளும் அழைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், ஹமாஸ் தீவிரவாதிகள் முன்னோடியில்லாத தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து பல கொலைகள் நிகழ்ந்த காசா எல்லைப்பகுதிகளின் கட்டுப்பாட்டை மீட்டுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அங்கு பல பகுதிகள் மற்றும் சாலைகளின் பாதுகாப்பை இஸ்ரேல் ராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதேபோல, அமெரிக்காவில் இருந்து அதிநவீன ஆயுதங்களுடன் வந்த முதல் விமானம் இஸ்ரேலின் நேவடிம் விமானநிலையத்தில் இறங்கியுள்ளதை அந்நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளது. இந்த ஆயுதங்கள் ஒருகுறிப்பிடத்தகுந்த தாக்குதல் மற்றும் கூடுதல் பலத்தினை உருவாக்க பயன்படுத்தப்படும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இஸ்ரேலுக்கு திடமான மற்றும் அசைக்கமுடியாத ஆதரவினை வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இது தொடர்பாக அதிபர் ஜோ பிடன் வெளியிட்ட அறிக்கையில், "ஹமாஸ் தாக்குதல் தீய செயல். தேவைப்பாட்டால் இஸ்ரேலுக்கு கூடுதல் உதவிகளையும் வழங்கத் தயாராக இருக்கிறோம். இந்தச் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் நாடுகள், அமைப்புகளுக்கு சொல்ல என்னிடம் ஒரு வார்த்தை உள்ளது. அது, வேண்டாம்" என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளின்ங்கென் வியாழக்கிழமை இஸ்ரேலுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த வெள்ளை மாளிகையின் அறிக்கையின் படி, இஸ்ரேல் அரசு மற்றும் மக்களுடனான அமெரிக்க அரசின் ஆதரவினை அவர் உறுதிபடுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இஸ்ரேல் மற்றும் காசாவில் மக்களின் மரணங்களால் அதிகரித்து வரும் பேரழிவு கவலையைத் தருவதாகவும் இந்தப் போர், மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் கொள்கை தோல்வி அடைந்திருப்பதையே காட்டுகிறது என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

கோலன் ஹைட்ஸ் பகுதியில் ராக்கெட் வீசி நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் சிரியா பகுதிகளிலும் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவிலிருந்து இஸ்ரேலை நோக்கி பல ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. இவைகளில் சில இஸ்ரேலின் எல்லை பகுதிகளில் வெட்ட வெளியில் விழுந்துள்ளன என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த குழுவினரையும் ராணுவம் குற்றம் சாட்டவில்லை.

"இஸ்ரேலிய போர் விமானங்கள் இரவு முழுவதும் காசாவின் 200 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளன. இதன் மூலம் ஹமாஸின் மையங்கள் உட்பட பல முக்கிய கட்டிடங்கள் தாக்கப்பட்டுள்ளன. தாக்கப்பட்ட வீடுகளில் ஒன்று ஹமாஸ்களின் ஆயுதக்குழு தலைவரான முகம்மது டெய்ஃபியின் தந்தையின் வீடு என பாலஸ்தீன செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன" என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தப் போரினால் காசா பகுதிகளில் இதுவரை 1,80,000 பேர் வீடிழந்துள்ளனர்; பலர் தெருக்களிலும் பள்ளிகளிலும் தங்கியுள்ளனர் என்று ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x