

காசா: ஹமாஸ் தாக்குதலில் 169 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரம், அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் முதல் விமானம் தெற்கு இஸ்ரேலில் தரையிறங்கியுள்ளது எனவும் இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 5-வது நாளை எட்டியுள்ளது. இந்தநிலையில், காசா மீதான வான்வழித் தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் அதிகமான துருப்புகளை தெற்கு இஸ்ரேல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை இஸ்ரேலில் 1,055-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 3,000 பேர் காயமடைந்துள்ளனர். காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் இதுவரை 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; சுமார் 5,000 பேர் காயமடைந்துள்ளனர்.
எரிபொருள் தீர்ந்தன: காசாவில் செயல்பட்டுவந்த ஒரே மின் உற்பத்தி நிலையத்தில் சில மணி நேரங்களில் எரிபொருள் தீர்ந்துவிடும் எனச் சொல்லப்பட்டிருப்பதால் காசா நகரம் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காசாவில் உள்ள அதிகாரிகள் கூறுகையில், "எரிபொருள் தீர்ந்து போனதால் சில மணிநேரங்களில் மின் உற்பத்தி நிலையம் முழுவதுமாக மூடப்பட்டு மின் விநியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.
மின் விநியோகம் சில பகுதிகளில் தடைப்பட்டிருப்பதால் காசா மருத்துவமனைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், போரில் காயமடைந்தவர்களை காப்பாற்ற மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களை பயன்படுத்த பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஐநா ஊழியர்கள் உயிரிழப்பு: காசா மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 9 ஐ.நா ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சியான UNRWA இந்த இறப்பு குறித்து எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
லெபனான் தாக்குதலுக்கு பதிலடி: இஸ்ரேலின் வடக்கு பகுதியை லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு குறிவைத்து தாக்கிவரும் நிலையில், எதிர்த் தாக்குதல் நடந்து வருகிறது. மேலும், லெபனானில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா பொறுப்பேற்றுள்ளது.
காசா நகரில் இருந்து 1.87 லட்சம் பேர் இடம்பெயர்வு: ஐ.நா. அகதிகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “காசா நகரில் இருந்து 1,87,500 பேர் வெளியேறி உள்ளனர். இவர்களில் 1,37,00 பேர் பள்ளி, கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். காசா நகரில் 790 அடுக்குமாடி குடியிருப்புகள் தரைமட்டமாகி உள்ளன. 5,330 அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன" என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “காசா நகருக்கான குடிநீர், உணவு, மருந்து விநியோகம் தடைபட்டிருக்கிறது. இப்பகுதி மருத்துவமனைகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எரிபொருள், மின்சாரம், தண்ணீர், மருந்துகள் இல்லாமல் மருத்துவமனைகளை நடத்த முடியாது. எனவே சர்வதேச சமுகம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்" என்று கோரப்பட்டு உள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் வால்கர் துர்க் கூறும்போது, “காசா நகருக்கு தேவையான அடிப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டு இருப்பதால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின்படி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது. இஸ்ரேலின் நடவடிக்கை சர்வதேச சட்டத்துக்கு எதிரானது” என்று தெரிவித்தார்.
ஹமாஸ் அமைப்பில் 30,000 பேர்: ஹமாஸ் அமைப்பில் சுமார் 30,000 பேர் உள்ளதாகக் கூறப்படுகிறது. காசா நகர் பதுங்கு குழிகளில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து அவர்கள் தொடர்ச்சியாக ஏவுகணை குண்டுகளை வீசி வருகின்றனர். ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாத குழுக்களும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்த குழுக்கள் இஸ்ரேலின் வடக்குப் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றன. அதோடு இஸ்ரேல் எல்லைப் பகுதியில் ஊடுருவ ஹமாஸ், ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
இஸ்ரேலின் முப்படைகளில் 1.73 லட்சம் வீரர், வீராங்கனைகள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும் போரில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதோடு ராணுவப் பயிற்சி பெற்ற 4.65 லட்சம் இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளனர். அவர்களில் 3 லட்சம் பேர் போரில் பங்கேற்க வரவழைக்கப்பட்டு உள்ளனர்.