Published : 09 Oct 2023 06:12 AM
Last Updated : 09 Oct 2023 06:12 AM
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் நடப்பாண்டில் 24 ஆயிரம் செல்லப்பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெறிநாய்க்கடி நோய்(ரேபிஸ்) பரவுவதைத் தடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சி மற்றும் ஹெவன் ஃபார் அனிமல்ஸ் அமைப்பு சார்பில் 1111 தெரு நாய்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய்தடுப்பூசி செலுத்தும் முகாம் செனாய் நகரில் நேற்று நடைபெற்றது.
இதில் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசிசெலுத்தி முகாமைத் தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு வெறிநாய்க்கடி நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
சென்னை மாநகராட்சியில் தெருநாய்கள் மூலம் வெறிநாய்க்கடி நோய் பரவுவதைத் தடுக்க புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி,கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய 5 நாய்இனக்கட்டுப்பாட்டு மையங்கள் இயங்கி வருகின்றன. தெருநாய்கள் குறித்து பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையிலும், நாய்கள் தொல்லை அதிகம் உள்ள இடங்களிலும் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டில் 16 ஆயிரத்து 713 தெருநாய்களுக்கும், நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் வரை 11 ஆயிரத்து 220 தெருநாய்களுக்கும் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், அண்ணாநகர் எம்எல்ஏ எம்.கே.மோகன், மாமன்றஆளுங்கட்சித் தலைவர் நா.ராமலிங்கம், அண்ணாநகர் மண்டலக்குழுத் தலைவர் கூ.பி.ஜெயின், ஹெவன் ஃபார் அனிமல்ஸ் அமைப்பை சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT