Last Updated : 09 Oct, 2023 06:43 AM

 

Published : 09 Oct 2023 06:43 AM
Last Updated : 09 Oct 2023 06:43 AM

உ.பி.யில் யாதவர்களைவிட உயர் சமூகத்தினர் அதிகம்: அரசியலாகும் 22 வருடங்களுக்கு முந்தைய கணக்கெடுப்பு

புதுடெல்லி: பிஹாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு வெளியானதை தொடர்ந்து, உ.பி.யிலும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்று சமாஜ்வாதி தலைவரும், முன்னாள் முதல் வருமான அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி வருகிறார். இச்சூழ லில், சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை நினைவுகூர்ந்து அரசியல் விவாதங்கள் தொடங்கி உள்ளன.

கடந்த 2001-ல் உ.பி.யின் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் (ஒபிசி) எண்ணிக்கையை அறிய ஒரு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடைபெற்றது. ஹுக்கும்சிங் தலைமையிலான குழு இதை முடித்து உ.பி. அரசிடம் ஒப்படைத்தது. இதில், இதர பிறப்படுத்தப்பட்ட பிரிவினர் (ஒபிசி) 54.05% இருப்பதாகக் கூறப்பட்டது. இது, கடந்த 1991-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் வெளியான 41 சதவீதத்தை விட அதிகம். இதற்கு அதே வருடத்தில் உ.பி.யிலிருந்து பிரிந்த உத்தராகண்ட் மாநிலம் ஒரு முக்கியக் காரணமானது.

உத்தராகண்ட் மாநில பிரிவின்போது உ.பி.யின் பெரும்பாலான உயர் சமூகத்தினர் அங்கு இடம்பெயர்ந்தனர். இதன் பிறகும் உ.பி. மற்றும் உத்தராகண்டில் உயர் சமூகத்தினர் அதிகம் உள்ளனர்.

இந்த பின்னணியில்தான் இந்த 2 மாநிலங்களில் மட்டும் பாஜக தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. எனினும், பிஹாரை விட உ.பி.யில் ஒபிசி பிரிவினரின் எண்ணிக்கை அதிகம். அதேசமயம், உயர்சமூகத்தினர் எண்ணிக்கை 18 முதல் 20 % எனஹுக்கும்சிங் குழு வெளியிட்டி ருந்தது. இதில், அதிக எண்ணிக் கையில் பிராமணர்கள் 12 முதல் 14% எனப் பதிவானது. மற்றொரு முக்கிய உயர்சமூகமான தாக்குர் எண்ணிக்கை 7 முதல் 8% ஆக இருந்தது.

பிராமணர்களுக்கு அடுத்த எண்ணிக்கையில் ஒபிசி பிரிவின் யாதவர் சமூகம் 2-வது நிலையில் 9 முதல் 11% என்றிருந்தது. அப்போது ஒபிசி பிரிவில் இடம்பெற்ற 54 சமூகங்களிலும் யாதவர்கள் எண்ணிக்கை அதிகமாக 19 முதல் 20% ஆக இருந்தது. இதில், மேலும் 24 சமூகங்களை இணைக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

தலித்களில் ஜாதவ் சமூகத்தினர் மிக அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றிருந்தனர். இதனால்தான், உ.பி.யில் ஒபிசி மற்றும் தலித்கள் மீதான அரசியல் அதிகம் நிலவுகிறது.

இந்த கணக்கெடுப்பில் கிராமங்கள் மற்றும் நகரங்களில் வாழும் சமூகங்கள் தொடர்பாகவும் ஹுக்கும்சிங் தனது புள்ளிவிவரங்களை வெளியிட்டிருந்தது. இதன்படி, கிராமங்களை விடநகரங்களில் உயர் சமூகத்தினர் அதிகம் வாழ்வதாக குறிப்பிடப் பட்டிருந்தது. உ.பி.யில் உள்ள கிராமங்களில் உயர்சமூகத்தினர் 22.42%, ஒபிசியினர் 37.50%, தலித்கள் 25%, முஸ்லிம்கள் 13.36% வசிப்பதாக தகவல் வெளியானது.

இதே சமூகங்களின் எண் ணிக்கை நகரங்களில் உயர்சமூகம் 32%, ஒபிசியினர் 21.96%, தலித்கள் 15.27% வசிப்பதாக அறிக்கை வெளியானது. 22 வருடங்களுக்கு முன்பான இந்த எண்ணிக்கை தற்போது கண்டிப்பாக உயர்ந்திருக்கும் என்பது அரசியல் கட்சிகளின் கணிப்பாக உள்ளது.

இந்த சூழல், சாதிகளின் அடிப்படையில் அரசியல் செய்யும் உ.பி. கட்சிகளுக்கு சாதகமாக உள்ளது. எனவே, பாஜக ஆளும் உ.பி. அரசை தொடர்ந்து சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த உ.பி.யைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x