Published : 20 Sep 2023 06:25 AM
Last Updated : 20 Sep 2023 06:25 AM
சென்னை: சென்னை மாநகராட்சி 59-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் கே.சரஸ்வதி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் 59-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.சரஸ்வதி (55). துறைமுகம் மேற்கு பகுதி துணை செயலாளராகவும் இருந்த அவர், கடந்த 18-ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். திருவல்லிக்கேணி எல்லிஸ் சாலையில் உள்ள வீட்டில், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மற்றும் கட்சியினர், பொதுமக்கள் ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நேற்று மாலை அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு கணவர் கருணாநிதி. மகன் சூர்யபிரகாஷ். மகள் துர்காதேவி உள்ளனர். சரஸ்வதி மறைவையடுத்து, சென்னை மாநகராட்சியில் காலியாகவுள்ள வார்டுகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ``வார்டு உறுப்பினர் சரஸ்வதி மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன். சீரிய மக்கள் பணியால், தனது பகுதியில் உள்ள ஒவ்வொருவரது வீட்டிலும் அங்கமாகி சரஸ்வதி நற்பெயர் பெற்றிருந்தார்.
அந்த வகையில், ஒரு சிறந்த பெண் அரசியல் ஆளுமையை நாம் இழந்துவிட்டோம். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் திமுகவினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT