Published : 24 Nov 2017 09:28 AM
Last Updated : 24 Nov 2017 09:28 AM

இரட்டை இலை: முடக்கம் முதல் மீண்டது வரை..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னம் கடந்த மார்ச் 22-ம் தேதி முடக்கப்பட்டது.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக பிரிந்திருந்த ஓ.பி.எஸ் அணிகள் சார்பில், 3 லட்சம் பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்டன. சசிகலா தரப்பினர் சார்பில் 6 லட்சத்து 80 ஆயிரம் பிரமாண பத்திரங்கள் வழங்கப்பட்டன. இதில் முதல்வராக பழனிசாமியை ஆதரித்து, 3 லட்சத்து 9 ஆயிரத்து 476 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இறுதியில் இரு அணிகளும் இணைந்த பின், இறுதியில் அதிமுக செயற்குழு முடிந்து, செப். 19-ம் தேதி ஆயிரத்து 877 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த பிரமாண பத்திரங்கள், டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா இறந்தபோது இருந்த நிர்வாகிகள் பட்டியல், தற்போதைய நிர்வாகிகள் பட்டியல் மட்டுமே தேர்தல் ஆணையம் முடிவெடுக்க ஆதாரமாக இருந்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் முடிவுப்படி, முதல்வர் பழனிசாமி- ஓபிஎஸ் தரப்புக்கு, 111 எம்எல்ஏக்கள், 34 மக்களவை, 8 மாநிலங்களவை எம்பிக்கள் தவிர, புதுச்சேரியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்களும் ஆதரவாக உள்ளனர். தினகரன் தரப்புக்கு, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மற்றும் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் என 20 எம்எல்ஏக்கள், 3 மக்களவை, 3 மாநிலங்களவை எம்பி.க்கள் மட்டுமே ஆதரவாக உள்ளனர்.

ஆர்.கே.நகர் தேர்தலின்போது முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்துக்காக, ஏப்ரல் 17-ம் தேதி முதல், இருதரப்பினரும் தேர்தல் ஆணையத்தை நாடினர். அதன்பின், ஜூன் 16, செப்.21, செப்.29 என 3 முறை ஆவணங்கள் அளிக்க அவகாசம் வழங்கப்பட்டது. அதன்பின் அக்.3ம் தேதி முதல், விசாரணை தொடங்கியது, அக், 6,16,20,22,23,30, நவம்பர் 1,6,8 என 9 முறை விசாரணை நடந்துள்ளது.

தேர்தல் ஆணையத்தில் சின்னம் தொடர்பான வழக்கை அவைத்தலைவர் இ.மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், செம்மலை ஆகியோர் தொடர்ந்தனர். இதை குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையம், இறுதியாக, முதல்வர் கே.பழனிசாமி இணைந்தார் என்பதையும் தெரிவித்துள்ளது. இரட்டை இலை, கட்சி பெயர் இரண்டையும் மதுசூதனன் தலைமையிலான அணியினருக்கு வழங்கியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்குக்காக மனுதாரர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மூத்தவழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் உள்ளிட்ட 44 வழக்கறிஞர்கள், சசிகலா சார்பில் ஹன்சாரியா விஜய், அபிஷேக் சிங்வி உள்ளிட்ட 25 பேர், முதல்வர் பழனிசாமி சார்பில் முகுல் ரோகத்கி உள்ளிட்ட 3 பேர், கே.சி பழனிசாமி சார்பில் அன்வேஷ் மதுக்கர், தீபா சார்பில் 3 பேர், புகழேந்தி, ஜோசப் சார்பில் தலா ஒருவர், மற்றவர்கள் சார்பில் 22 பேர் என 100 வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x