Last Updated : 19 May, 2024 02:01 PM

 

Published : 19 May 2024 02:01 PM
Last Updated : 19 May 2024 02:01 PM

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளை நிறைவு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன்(மே 20) நிறைவு பெறுகிறது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதுள்ள 7,283 தனியார் பள்ளிகளில் சுமார் 85,000 இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013-ல் அமலான இந்த ஆர்டிஇ திட்டத்தின்கீழ் இதுவரை 4.6 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் வரும் கல்வியாண்டு (2023-24) இலவச மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கியது. இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர். இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன்(மே 20) முடிவடைகிறது. இதையடுத்து விருப்பமுள்ள பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரு பெற்றோர் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சேர்க்கை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் பள்ளிக்கல்வியின் உதவி மையத்துக்கு 14417 தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x