Published : 08 Aug 2023 05:58 AM
Last Updated : 08 Aug 2023 05:58 AM

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் அஞ்சலி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து மெரினாவில் உள்ள நினைவிடம் வரை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேரணி. இதில், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். படம்: ம.பிரபு

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முதல்வராக 6 முறை பதவி வகித்தவரும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக தலைவராகவும் இருந்த கருணாதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, நேற்று காலை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் வளாகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வந்தார். அவருடன் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு, உதயநிதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி.கணேசன் உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. மற்றும் தலைமை நிலையச் செயலர் அமைச்சர் கே.என்.நேரு, முதல்வரின் சகோதரர் மு.க.தமிழரசு, திமுக துணைப் பொதுச் செயலாளர்கள், எம்.பி.க்கள், மாதவரம் எஸ்.சுதர்சனம் உள்ளிட்ட எம்எல்ஏ-க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இணைந்தனர். அங்குள்ள கருணாநிதியின் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, காலை 8 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது. அண்ணா சாலை, வாலாஜா சாலை, காமராஜர் சாலை வழியாக 40 நிமிடங்கள் நடைபெற்ற பேரணி, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிட வளாகத்துக்கு வந்தது. அங்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்த படத்துக்கு மரியாதை செலுத்தினார். அப்போது, துரைமுருகன், உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அங்கு சிறுவன் ஒருவன் கருணாநிதி குறித்து கவிதை பாட, அதைக் கேட்டு ரசித்த முதல்வர்ஸ்டாலின், ‘தமிழினத் தலைவர் கருணாநிதி நினைவு நாளில், மழலைத் தமிழ்க் கவிதையால் நெஞ்சம் நிறைந்தது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பின்னர், முரசொலி அலுவலகம் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள கருணாநிதி சிலைக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, முரசொலி இணையதளம் மற்றும் செயலியைத் தொடங்கிவைத்தார். இதில், அமைச்சர்கள் மற்றும் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்ட எம்.பி.க்கள், திமுக செய்தித் தொடர்பு செயலர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, அண்ணா அறிவாலயம் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள கருணாநிதியின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், சிஐடி நகர் வீட்டுக்குச் சென்று, அங்குள்ள கருணாநிதியின் படத்துக்கு மரியாதை செலுத்தினார். கருணாநிதியின் துணைவியார் ராசாத்திஅம்மாள், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதற்கிடையில், பேரணியில் பங்கேற்ற சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

டெல்லி அறிவாலயம்: டெல்லியில் உள்ள திமுக அலுவலகமான அறிவாலயத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் திருச்சி சிவா, வில்சன், என்.ஆர்.இளங்கோ, சண்முகம், கிரிராஜன் உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதேபோல, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள, நாடாளுமன்ற திமுக அலுவலகத்தில் கருணாநிதியின் படத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில், திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள், காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ஜோதிமணி உள்ளிட்ட எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x