Published : 08 Aug 2023 06:26 AM
Last Updated : 08 Aug 2023 06:26 AM
சென்னை: பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களை வரைமுறைப்படுத்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நேற்று ‘வரைவுச் சட்டம்’ வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ், துணைப் பொதுச் செயலாளர் சாமிநாதன், பொருளாளர் மோகனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நாகை மாலி உள்ளிட்டோர், சென்னை சேப்பாக்கத்தில் ‘வரைவுச் சட்டத்தை’ வெளியிட்டனர்.
இதுகுறித்து அமைப்பின் பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பட்டியல் சமூகத்தினர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பழங்குடியினர் துணைத் திட்டமும், பட்டியல் சாதியினர் சிறப்புஉட்கூறுத் திட்டமும் கொண்டுவரப்பட்டது. தற்போது மத்திய அரசால் இந்த திட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது திட்டத்தின் உள்ளார்ந்த செயல் திறனை பாதிப்பதாக உள்ளது. தமிழக முதல்வர், வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், துணை திட்டங்களை வரைமுறைப்படுத்துவதற்கான சட்டம் இயற்றப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், துணைத் திட்டங்களை வரைமுறைப்படுத்துவதற்காக சட்ட வரைவை வெளியிட்டுள்ளோம். இதில், சட்டத்தின் வரையறை நோக்கம், திட்டத்தை நிர்வகிப்பதற்கான நிர்வாக ஏற்பாடுகள், திட்டமிடல், திட்டங்களை ஆய்வு செய்து, நிதிஒதுக்கீடு செய்தல், திட்டத்தை செயல்படுத்துவது, வெளிப்படைத்தன்மை, பொறுப்புகள்,ஊக்கத்தொகை, தண்டனைகள், கண்காணிப்பு முறைகள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.
இதை, தலைமைச் செயலர், ஆதிதிராவிடர் நலத் துறைச் செயலர், இயக்குநரிடம் வழங்கி உள்ளோம். பட்டியல் மற்றும் பழங்குடியினர் மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒதுக்கிய நிதியை, சிறப்புத் திட்டங்களின் மூலமாக செயல்படுத்த வேண்டும். மேலும், இந்த நிதியை வேறு பொதுத் திட்டங்களுக்கு மாற்றம் செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT