Published : 07 Aug 2023 09:57 PM
Last Updated : 07 Aug 2023 09:57 PM

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்தது ஏன்? - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

சென்னை: பொது ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுத்துவதால் தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இது அரசின் கொள்கை முடிவு, என்று செனனை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "ரம்மி நேரடியாகவும், ஆன் லைனில் விளையாடுவதும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானவை. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. நேரடியாக விளையாடுவதற்கும், ஆன்லைனில் விளையாடுவதற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. இரண்டையும் ஒப்பிடவே முடியாது. ரம்மி விளையாட்டை நேரில் விளையாடும்போது தான், அதை திறமைக்கான விளையாட்டாக கருத முடியும்.

18 வயதுக்கு குறைவானவர்களை விளையாட அனுமதிப்பதில்லை. சுய அறிவிப்பு அடிப்படையில் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பான சுய அறிவிப்பு எப்படி சரி பார்க்கப்படுகிறது? என்பது குறித்து விளக்கப்படவில்லை.ரம்மி, திறமைக்கான விளையாட்டாக இருக்கலாம். அதற்காக சூதாட்டத்துக்கு அனுமதிக்கலாமா? ஆன்லைனில் ரம்மி விளையாட்டில் வெற்றி பெற்றவர்கள், வென்ற பணம் முழுவதையும் பெற முடியாது. அதில் ஒரு பகுதி ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்துக்கு செல்கிறது. ஆனால் நேரடியாக விளையாடும் போது இதுபோல நடப்பதில்லை.

ஆன்லைன் விளையாட்டுக்களால், 76 சதவீத குழந்தைகள், கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களது கல்வி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆன்லைன் விளையாட்டுக்களை அரசு ஒழுங்குபடுத்த முடியுமே தவிர தடை செய்ய முடியாது என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், எது சூதாட்டம்? குழந்தைகள் எப்போது விளையாடலாம்? என அரசு எப்படி முறைப்படுத்த முடியும்? தனிப்பட்ட நபர்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த முடியாது என்பதால் ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த முடியாது. பொது ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுத்துவதால் தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இது அரசின் கொள்கை முடிவு" என்று வாதிட்டார்.

அரசு தரப்பு வாதம் முடிவடையாததால்,வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x