Published : 07 Aug 2023 08:31 PM
Last Updated : 07 Aug 2023 08:31 PM

30 நாட்களில் 34 மீனவர்கள் கைது: நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: "கடந்த 30 நாட்களில் மட்டும் 3 வெவ்வேறு சம்பவங்களில் 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவரத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இன்று (ஆக.7) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவது மிகுந்த கவலையளிக்கிறது. IND-TN-06-MM-948 பதிவு எண் கொண்ட படகில் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 93 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 14 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 நாட்களில் மட்டும், 3 வெவ்வேறு சம்பவங்களில், 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகள், பல தலைமுறையாக மீனவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, அவர்களுக்கான வாழ்வாதாரத்தையும் வழங்கி வருகிறது. இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், மீனவ மக்களுக்கு பெரும் துன்பத்தையும், துயரத்தையும் அளிக்கிறது.

இலங்கை சிறையில் வாடும் 19 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து, அவர்களை தாயகம் அழைத்து வரத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பல்லாயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களை பாதிக்கும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை காண வேண்டும். ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் தலையீடும், ஆதரவும், இந்தப் பிரச்சினையை விரைவாகத் தீர்த்து, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் பெரும் நிம்மதியைத் தரும் என நம்புவதாக அக்கடித்ததில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x