Published : 07 Aug 2023 08:50 PM
Last Updated : 07 Aug 2023 08:50 PM

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி 5% ஆக குறைவு: முதல்வர் ஸ்டாலின் கவலை

“நான் முதல்வன்” திட்டத்தை பாலிடெக்னிக்குகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் விரிவுபடுத்தினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: "குடிமைப் பணித் தேர்வு என்று சொல்லப்படுகிற ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் தமிழக மாணவர்களுடைய தேர்ச்சி, நாளுக்கு நாள் குறைந்துகொண்டு வருகிறது. 2016-ம் ஆண்டில் இருந்து, 10 விழுக்காட்டுக்கு மேல் என்ற நிலையில் இருந்து, 5 விழுக்காடாக குறைந்து விட்டது. இது என்னை மிகவும் வருந்த வைக்கிறது" என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், திங்கள்கிழமை நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது: “நான் முதல்வன்” திட்டம் மூலமாக, 445 பொறியியல் கல்லூரிகளில் திறன் பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது. இதில் பயிற்சி பெற்ற 85 ஆயிரத்து 53 பொறியியல் பட்டதாரிகள் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பித்திருந்தார்கள். அதில், 65 ஆயிரத்து 34 மாணவர்கள் மிகச் சிறந்த இடங்களில் பணி நியமனம் பெற்றிருந்தார்கள். இதை சொல்வதில், நான் அளவில்லா பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

அதேபோல, 861 கலைக் கல்லூரிகளில் “நான் முதல்வன்” திட்டம் செயல்பாட்டில் இருந்தது. இந்தக் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற, 99 ஆயிரத்து 230 மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களுக்கு பணிகள் கேட்டு விண்ணப்பித்திருந்தார்கள். இதில், 83 ஆயிரத்து 223 மாணவர்கள் பணி நியமனம் பெற்றிருந்தார்கள்.“நான் முதல்வன்” திட்டம் மூலமாகவும், தனியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதன் மூலம், 5 ஆயிரத்து 844 பொறியியல் மாணவர்களுக்கும், 20 ஆயிரத்து 82 கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த திட்டத்தினுடைய மாபெரும் வெற்றி இது. இந்த திட்டத்தினுடைய ஓராண்டு வெற்றி இது.

“நான் முதல்வன்” இணையதளம் மூலமாக, 25 லட்சம் மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். இந்த இணையதளம் 4 கோடி முறை பார்வையிடப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு திட்டம் தமிழக மாணவ சமுதாயத்தில் எப்படிப்பட்ட அறிவுப் புரட்சியை உருவாக்கி வருகிறது என்பதற்கான எடுத்துக்காட்டுகள் இவைகள் எல்லாம். தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில், 2 கோடியே 31 லட்சம் இளைஞர்கள், 18 வயதிலிருந்து 35 வயதுக்கு உட்பட்டோர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்லுகின்றது. அதாவது 33 விழுக்காடு பேர். இந்த இளைய சக்தியை வளர்த்தெடுக்க வேண்டும்.

“நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக, நான் முன்னேறி இன்றைக்கு நல்ல நிலைமையில் இருக்கிறேன்” என்று நீங்கள் சொல்வதைவிடப் பெரிய பெருமை எனக்கு வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த நேரத்தில், ஒரு வருத்தமான செய்தியையும் பதிவு செய்துதான் ஆகவேண்டும்.குடிமைப் பணித் தேர்வு என்று சொல்லப்படுகிற ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் தமிழக மாணவர்களுடைய தேர்ச்சி, நாளுக்கு நாள் குறைந்துகொண்டு வருகிறது. 2016-ம் ஆண்டில் இருந்து, 10 விழுக்காட்டுக்கு மேல் என்ற நிலையில் இருந்து, 5 விழுக்காடாக குறைந்து விட்டது. இது என்னை மிகவும் வருந்த வைக்கிறது. இந்த நிலை மாறவேண்டும். நாம்தான் மாற்றவேண்டும்.

அதற்காகத்தான் ‘நான் முதல்வன்’ திட்டத்தினுடைய ஒரு பகுதியாக ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வு பயிற்சிப் பிரிவு உருவாக்கப்பட்டது. குடிமைப் பணி தேர்வு எழுதுகிற மாணவர்களுக்கு, இனி பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று, சமீபத்தில் இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தோம்.முதல் அறிவிப்பு, ஒவ்வொரு ஆண்டும், ஆயிரம் பேருக்கு, முதல்நிலைத் தேர்வுக்கு தயாராக, மாதம் 7,500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும். இரண்டாவது, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறக்கூடிய மாணவர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

இந்த பொருளாதார உதவியானது, குடிமைப் பணி தேர்வுக்காக படிக்கின்ற மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும். அதைவிட முக்கியமாக, அவர்கள் IAS,IPS அதிகாரியானால், நம்முடைய தமிழகத்துக்குத்தான் பெருமை. வங்கித்துறை, ரயில்வே துறை, மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆகிய தேர்வுகளுக்கும், ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சித் திட்டத்தில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எல்லா மாவட்டங்களிலும் பயிற்சிகள் தந்துகொண்டு இருக்கிறோம். சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும், அனைத்துப் பணிகளிலும் இடம் பெறவேண்டும். அதிகாரத்தை அடையவேண்டும்.

அந்த சமூக நீதியை நிலை நிறுத்துவதுதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் லட்சியம். அதற்காகத்தான் இத்தனை திட்டங்களும். இதற்கு தேவையான எல்லாவற்றையும் செய்து தர, நான் இருக்கிறேன். நம்முடைய அரசு இருக்கிறது. உங்களிடம் நான் கேட்பது எல்லாம், அரசு உருவாக்கித் தருகிற வாய்ப்புகளை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். படியுங்கள், படிக்கின்ற காலத்தில் எந்த கவனச் சிதறல்களும் கூடாது" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x