Published : 30 Jul 2023 04:10 AM
Last Updated : 30 Jul 2023 04:10 AM
சென்னை: பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் படைப்புகளை மாணவர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.
ஏகாத்ம மாணவ வாத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (ஆர்.டி.எப்.ஐ.எச்) தமிழக கிளை சார்பில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் படைப்புகளின் தொகுப்பு வெளியிடும் நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் நேற்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி, நூல்களின் தொகுப்பை வெளியிட்டு பேசியதாவது:
காலனி ஆதிக்கத்துக்கு முன்பு சென்னை மாகாணத்தில் சில சமூகங்கள் மட்டுமே இருந்தன. பின்னர் அவற்றில் நாளுக்கு நாள் பல்வேறு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. முன்பெல்லாம் ஆரியம், திராவிடம் பற்றி யாருக்கும் தெரியாது. ஆங்கிலேயர்கள் மற்றும் அவர்களது இந்திய தோழர்களே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இதை உருவாக்கினர்.
அதேநேரம், பல ஆண்டுகளாக இங்கு வசிப்போராக இருந்தாலும் இடம் பெயர்ந்தவர்களாகவே கருதப்படுகின்றனர். இன்று மொழி சிறுபான்மையினருக்காக போராடுகின்றனர். ஆனால், பள்ளிகளில் அவர்களின் தாய் மொழியில் பாடம் நடத்த அனுமதிப்பதில்லை. எந்த கேள்வியும் இன்றி மேற்கத்திய சிந்தனைகளை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். அவற்றில் 4 மேற்கத்திய சிந்தனைகள் பிரிவினையை உண்டாக்குகின்றன. அவை இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் முரண்பாடாக உள்ளது.
குடும்பம் என்னும் அமைப்பு தனி மனிதனின் வளர்ச்சியை தடுக்கிறது என கார்ல் மார்க்ஸ் என்றொரு சிந்தனையாளர் கூறுகிறார். என்ன ஒரு சிந்தனை. தர்க்கம் மகிழ்ச்சிக்கு வழிசெய்வதை விட அதிகளவு குழப்பத்தையே உண்டாக்கும். டார்வின் என்றொரு மற்றொரு அறிஞரோ, குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்கிறார். அதுமட்டுமின்றி வலியது வாழும் என்றொரு கருத்துக்கு அவருக்கு முனைவர் பட்டம் வேறு வழங்கப்பட்டுள்ளது. அந்த கருத்து இன்னும் நம் மனதில் உள்ளது.
இதற்கிடையே மேற்கத்திய சிந்தனைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பண்டிட் தீனதயாள் உபாத்யாயா என்னும் மாமனிதர் நம் நாட்டில் இருந்திருக்கிறார். நம்மில் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்விலும் அவர் இணைந்திருக்கிறார். நாட்டை வளப்படுத்தும் வகையில் அவரது தத்துவங்களை மாணவர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். மென்மேலும் அவரது படைப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், ஆர்டிஎப்ஐஎச் அமைப்பின் தலைவர் மகேஷ் சந்திர சர்மா, துக்ளக் ஆசிரியர் எஸ்.குரு மூர்த்தி, அயோத்தி தாசரின் கொள்ளு பேத்தி நிர்மலா அருள் பிரகாஷ், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் வாசுதேவன் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT