Published : 20 Jul 2023 07:40 PM
Last Updated : 20 Jul 2023 07:40 PM

மணிப்பூர் சம்பவத்தில் உச்ச நீதிமன்ற தலையீட்டுக்கு பின் பிரதமர் முணுமுணுப்பது வரலாற்றுத் துயரம்: முத்தரசன்

முத்தரசன் | கோப்புப்படம்

சென்னை: "மூன்று மாதங்களாக மணிப்பூரில் நடந்து வரும் நிகழ்வுகள் உலக நாடுகளின் விவாதத்துக் ஆளாகி வருகின்றது. இந்த நிலையிலும் நாட்டின் பிரதமர் வாய் திறந்து பேசாமல் மவுன சாட்சியாக இருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். நாட்டின் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்னரே பிரதமரின் உதடுகள் மெல்ல திறந்து முணு முணுப்பது வரலாற்று துயரமாகும்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3-ம் தேதி தொடங்கிய வன்முறை சம்பவங்கள் மூன்று மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வீடுகள் - வணிக நிறுவனங்கள், ஒன்றிய இணை அமைச்சரின் வீடு - குடோன்கள் உட்பட அனைத்தும் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் பல பகுதிகள் பற்றி எரிந்து வருகின்றது. போராட்டக்காரர்கள் காவல் நிலையங்களில் இருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துச் சென்று உள்ளனர்.

தொடரும் வன்முறையில் இதுவரை சுமார் 200 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ஐந்தாயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசின் நிவாரண முகாம்களில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் தஞ்சம் அடைந்து, சொந்த நாட்டில் அகதிகளா நிற்கிறார்கள்.இந்நிலையில் 19 வயதை எட்டாத சிறுமி உட்பட மூன்று பெண்களின் ஆடைகளை களைந்து, நிர்வாணமாக இழுத்துச் சென்று அவதிக்கப்பட்டு, மறைவிடத்துக்கு கொண்டு சென்று, பாலியல் வன்கொடுமை தாக்குதல் நடத்தி, சீரழித்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த இழி செயலால் நாடு வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது.

பெண்களின் கண்ணியத்தை காக்க முயன்ற பெண்ணின் சகோதரர் உட்பட இளைஞர்கள் வன்முறையாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூம் நடந்திருப்பது அங்கு ஆட்சி நிர்வாகமும், சட்ட ஒழுங்கும் முற்றிலுமாக நிலைகுலைந்து போயிருப்பது நாட்டின் பார்வைக்கு வெளிப்பட்டுள்ளது. மூன்று மாதங்களாக மணிப்பூரில் நடந்து வரும் நிகழ்வுகள் உலக நாடுகளின் விவாதத்துக் ஆளாகி வருகின்றது. இந்த நிலையிலும் நாட்டின் பிரதமர் வாய்திறந்து பேசாமல் மவுன சாட்சியாக இருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். நாட்டின் உச்சநீதிமன்றம் தலையிட்ட பின்னரே பிரதமரின் உதடுகள் மெல்ல திறந்து முணு முணுப்பது வரலாற்று துயரமாகும்.

உலக நாடுகளை சுற்றி வரும் பிரதமர், பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சி நடக்கும் மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றாக கைவிட்டுப் போய், மக்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது பற்றி கிஞ்சிற்றும் கவலை கொள்ளாது, வாய்ச்சவாடல் முழங்கி வருவது வெட்கக் கேடானது. தொடர்வது மிகுந்த கவலைக்குரியது.மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட தவறிய நாட்டின் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற முறையில் பகிரங்க மன்னிப்பு கோருவதுடன், அமைதியை நிலைநாட்டவும், பெண்களை சீரழித்த கயவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கவும் - பாதிக்கப்பட்ட, பெண்கள் உட்பட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கிட முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x