Published : 20 Jul 2023 05:51 PM
Last Updated : 20 Jul 2023 05:51 PM

“கச்சத்தீவு பற்றி பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது?” - அண்ணாமலை ஆவேசம்

அண்ணாமலை | கோப்புப்படம்

சென்னை: "திமுக பலமுறை, பல கட்சிகளுடன் சந்தர்ப்பவாத கூட்டணியில் இருந்து, மத்திய அரசில் அங்கம் வகித்தபோதும் கச்சத்தீவை மீட்க உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கச்சதீவைத் தாரை வார்த்த திமுக கும்பலுக்கு, கச்சத்தீவு பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இரண்டு நாள் பயணமாக புது டெல்லி வர உள்ளதை அடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதம் முழுக்க முழுக்க, கடந்த கால காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியின் தவறுகளை எல்லாம் வெளிப்படுத்தும் ஒப்புதல் வாக்குமூலமாகவே இருக்கிறது. காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியின் தவறுகளை சரி செய்ய, பிரதமர் மோடியால் மட்டும்தான் முடியும் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டதற்கு, முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில், தமிழ் சகோதர சகோதரிகள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்டபோது, இங்கே காங்கிரஸ் கூட்டணியில் பசையான மத்திய அமைச்சர் பதவியை வாங்க டெல்லிக்குப் பறந்தவர்கள், ஏதோ கடிதங்கள் எழுதியே பிரச்சினைகளைத் தீர்த்து விட்டதைப் போல இன்று பெருமையடித்துக் கொண்டிருப்பது நகைக்கத்தக்கது. திமுக ஆட்சியில் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது, பாஜக தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி, அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார். தமிழகத்தில் அன்று ஆட்சியில் இருந்த திமுக, அந்த வழக்குக்குத் தேவையான ஆவணங்களைக் கூட நீதிமன்றத்தில் வழங்காமல் கச்சத்தீவு நம் கைவிட்டுச் செல்ல காரணமாக இருந்தது.

திமுக அதன்பின்னர், பலமுறை, பல கட்சிகளுடன் சந்தர்ப்பவாத கூட்டணியில் இருந்து, மத்திய அரசில் அங்கம் வகித்தபோதும் கச்சத்தீவை மீட்க உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கச்சதீவைத் தாரை வார்த்த திமுக கும்பலுக்கு, கச்சத்தீவு பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?

முதல்வர் ஸ்டாலினுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். உங்கள் குடும்பத்தினர் மத்திய அமைச்சர் பதவி வாங்க, தமிழர்களின் நலனை நீங்கள் அடகு வைத்த அதே காலத்தில், அன்றைய குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடி, 2009-ம் ஆண்டு, பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, இலங்கையில் தமிழ் மக்கள் தாக்கப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, அதனைக் கண்டும் காணாமல் இருக்கும் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளைக் கடுமையாக கண்டித்தார். இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்று அன்றைய காங்கிரஸ் அரசை வலியுறுத்தினார்.

உங்களை விட, தமிழ் மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர் பிரதமர் மோடி. இலங்கைத் தமிழர்களுக்கு 51,000 வீடுகள், அவர்களுக்காக தொழிற்கூடங்கள் அமைப்பு, தமிழர் பகுதிகளில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த, இலங்கையின் மற்ற பகுதிகளை இணைக்கும் வண்ணம் சாலை, ரயில் போக்குவரத்து வசதிகள், காங்கேசன்துறை துறைமுகத்தை தமிழகத்துடன் இணைக்க கப்பல் வசதி, யாழ்ப்பாண தமிழ் கலாசார மையம், சென்னையில் இருந்து விமானப் போக்குவரத்து வசதி என, இலங்கைத் தமிழர்கள் வாழ்வு மேம்பட பிரதமர் மோடி செய்துள்ள நலப்பணிகள் ஏராளம்.

இலங்கையில் தமிழர்களுக்கு உரிமை வழங்கும் 13-ம் சட்டத்திருத்தம் கொண்டுவர, பிரதமர் மோடி இரண்டு முறை வலியுறுத்தியிருக்கிறார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த ஜனவரி மாதம் இலங்கை பயணத்தின் போதும் 13-ம் சட்டத்திருத்தம் கொண்டுவர வலியுறுத்தியிருக்கிறார். விரைவில் அது அமலுக்கு வரும் என்றும் உறுதி தெரிவித்திருக்கிறார்.

இலங்கை மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மீனவர்கள் கைது செய்யப்பட்டால், இந்திய அரசின் வெளியுறவுத் துறை துரிதமாகச் செயல்பட்டு, மீனவர்களுக்கு உடனடி சட்ட உதவிகளை வழங்கி மீட்டுக் கொண்டு வருகிறது. அவர்கள் உயிருக்கும் உடமைகளுக்கும் உத்தரவாதம் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

முன்னதாக, இந்தியப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை அதிபரிடம், இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும், இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிடவும் வலியுறுத்திட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். | வாசிக்க > கச்சத்தீவு, மீனவர் பிரச்சினை: இலங்கை அதிபரிடம் வலியுறுத்த பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x