Published : 15 Nov 2017 11:13 AM
Last Updated : 15 Nov 2017 11:13 AM

ராயப்பேட்டையில் டிரான்ஸ்பார்மர் சீரமைப்புப் பணியின் போது மின்சாரம் பாய்ந்து ஊழியர் காயம்

சென்னை ராயப்பேட்டையில் டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) சீரமைப்புப் பணியின்போது மின்சாரம் பாய்ந்ததால் மின்வாரிய ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.

கைகளில் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் அவர் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்துக்கு எதிரே தனியார் கல்வி நிறுவனம் ஒன்று உள்ளது. அந்நிறுவனத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஃபோர்மேன் ஹூசைன் (54) மற்றுமொரு ஊழியர் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதில் ஹூசைனுக்கு காயம் ஏற்பட்டது. இரண்டு கைகளிலும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அதிர்ச்சியில் அவர் டிரான்ஸ்பார்மரிலேயே அமர்ந்துவிட்டார்.

உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட சம்பவ இடத்துக்குவந்த திருவல்லிக்கேணி தீயணைப்புப் படையைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினர் ஏணி உள்ளிட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி ஹூசைனை மீட்டனர்.

அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஹூசைனின் வீடும் அதே பகுதியில் இருப்பதால் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு உறவினர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் கதறி அழுத காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

மீட்புப் பணிகள் குறித்து ஃபயர் ஆபீஸர் ராஜசேகரன் கூறும்போது, "எங்களுக்கு தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்துக்கு வந்துவிட்டோம். ஒருவர் மின்சாரம் பாய்ந்தவுடன் கீழே குதித்துவிட்டார். மற்றொருவருக்கு கையில் நல்ல காயம் ஏற்பட்டிருந்தது.

அதிர்ச்சியில் அவர் அந்த இடத்திலேயே அமர்ந்திருந்தார். நாங்கள், ஏணியைப் பயன்படுத்தி மேலே ஏறினோம். பயப்பட வேண்டாம் பத்திரமாக மீட்டுவிடுவோம் என அவருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே ஏறினோம். அதனால், அவர் சற்றே நம்பிக்கை பெற்றதுபோல் காணப்பட்டார்.

ஸ்ட்ரெச்சர் மூலம் அவரை கீழே இறக்கினோம். பின்னர் தயார்நிலையில் இருந்த ஆம்புலன்ஸில் அவர் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x