Published : 12 Jun 2023 06:47 AM
Last Updated : 12 Jun 2023 06:47 AM
சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, தனியார் பள்ளிகளைப் போல 4 வண்ணங்களில் வண்ண டி-ஷர்ட் வாங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை மாநகராட்சியில் 281 பள்ளிகள் இருந்தன. தற்போது மாநகராட்சி எல்லையில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த 139 பள்ளிகளும் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாநகராட்சி பள்ளிகளின் எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளது.
இவற்றில் 46 உயர்நிலைப் பள்ளிகள், 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தமுள்ள 81 பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக 4 குழுக்களாகப் பிரித்து, அவற்றுக்கு அரக்கு நிறம், பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய வண்ணங்களில் டி-ஷர்ட்கொள்முதல் செய்து வழங்கப்படும் என்று நடப்பாண்டு பட்ஜெட்டில் மாநகராட்சி மேயர்ஆர்.பிரியா அறிவித்திருந்தார்.
அதைச் செயல்படுத்தும் விதமாக மாநகராட்சி நிர்வாகம், மொத்தம் உள்ள 81 உயர்நிலை மற்றும்மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துள்ளது. அதன்படி தற்போது 29 ஆயிரத்து 258 பேர் படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு டி-ஷர்ட் வாங்க ரூ.62 லட்சத்தை மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கியுள்ளது. இம்மாணவர்களுக்கானடி-ஷர்ட் வழங்கும் ஆர்டர், தமிழ்நாடு ஜவுளிக் கழகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், விரைவில் மாணவர்களுக்கு வண்ண டி-ஷர்ட் வழங்கப்பட இருப்பதாக மாநகராட்சி கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT