Published : 10 Nov 2019 09:49 AM
Last Updated : 10 Nov 2019 09:49 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 31: மக்கள் அனைவருக்கும் ‘கறந்த மனது’

பாரததேவி

அந்தக் காலத்தில் தாலி செய்வதற்கான கயிற்றை விலைக்கு வாங்க மாட்டார்கள். எப்போதும் கிராமங்களில் ஐந்தாறு கல்யாணங்கள் சேர்ந்து முடிப்பதால் இந்தச் சங்குப் பெரியவர்தான் பஞ்சில் நூலெடுத்துத் தாலிக் கயிற்றைத் திரித்துக் கொடுப்பார்.

அது கெட்டியான கயிறாக அவரின் அழுத்தமான மஞ்சள் தடவலில் ஒரு தங்கச் சங்கிலியாகப் பெண்களின் கழுத்தில் மின்னிக்கொண்டிருக்கும். அதிலும் நல்ல கைராசிக்காரர் என்று பெயர் வேறு பெற்றிருந்தார். இதனால் எல்லோரும் அவரிடம்தான் தாலிக்காகக் கயிறு திரித்தார்கள்.

புத்திசாலி பூவம்மா

எல்லோருடைய சாட்சியாக பொழுது மலை வாயிலில் விழுந்துகொண்டிருந்தது. நிலம் முழுவதும் சூரியனின் மஞ்சள் ஒளி பூத்துக்கிடந்தது. துளசி இப்போதும் மௌனமாக உட்காந்திருந்தாள். அவள் விழிகளில் கண்ணீர் வற்றியிருந்தது. அவளுடைய பிள்ளைகள் நால்வரும் கண்களில் பயத்தோடும் பசியோடும் வரப்பின் ஒரு ஓரமாகப் பம்மிக்கிடந்தார்கள். பூவம்மா காட்டில் கடலை ஆய்ந்துகொண்டிருந்த அத்தனை பேரையும் கூப்பிட்டாள். தன் கையில் இருந்த மஞ்சள் கயிற்றைக் காட்டி எல்லோரிடமும், “இப்போதைக்கு இந்த மஞ்சக் கெழங்குதேன் அவ கழுத்துக்குத் தாலியா இருக்கப்போவுது. இதத்தவுத்து எனக்கு வேற வழி தெரியல. இப்ப துளசி ஒத்த மனுசியா இருந்தான்னா நானு இப்ப இப்படியொரு மாங்கல்யத்த செஞ்சியிருக்க மாட்டேன். பட்டினியே கிடந்து சாவட்டுமின்னு விட்டிருப்பேன். ஆனா, அவளோட சேந்து விவரம் அறியாத நாலு பச்ச மண்ணுகளும் இருக்குகளே. அதுக்கு யாரு கஞ்சி ஊத்துவா? அணச்சி ஆதரவு கொடுப்பா? இந்த மஞ்சள நம்ம நல்ல காரியத்துக்குத்தேன் பயன்படுத்துதோம். இதுதேன் இனிமே அவளுக்குத் தாலி. இத உங்க எல்லாருடைய சாச்சியா மட்டுமில்ல இந்தா இருக்க சங்கு அண்ணன் சாச்சியாவும் அவ கழுத்தில நானு கட்டப்போறேன். எல்லாத் தெய்வங்களும் என்னப் பொறுத்துக்கிடணும்” என்றாள்.

இரண்டொரு பெண்கள் இதை எதிர்த்தனர். அதிலும் ராமாயிதான் ரொம்பவும் தடுத்தாள்.

தாலியாக மாறிய மஞ்சள்

அவளுக்கு எப்போதும் துளசியைப் பிடிக்காது. ராமாயி கொஞ்சம் வசதியானவள். ஒருவேள கஞ்சிக்கு வழியில்லாதவ தன்னிடம் வந்து கெஞ்சி தன் வீட்டில் ஆட்டுச்சாணி, மாட்டுச்சாணி அள்ளிப்போட்டு வேலை செய்தால் ரெண்டு படி தானியம், தவசம் கொடுப்போம் என்று ரொம்ப நாளாகவே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள். ஆனால், இதுவரை துளசி அவள் வீட்டுப் பக்கம் போகவே இல்லை.

ஆனால், பூவம்மா ஒரு முடிவோடு தன்னுடன் வந்தவர்களைக் கூட்டிக்கொண்டு போனதோடு துளசியின் கழுத்தில் தாலியைக் கட்டி அவளைப் பிஞ்சைக்குக் கூட்டிவந்தாள். நாலு படி நிலக்கடலையையும் அளந்துபோட்டு ஒரு ரூபாய் நோட்டும் கொடுத்தாள். துளசிக்குப் பேசவும் முடியவில்லை; நட்டமாக நிற்கவும் முடியவில்லை. பூவம்மாவின் காலில் விழுந்து கும்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்தவள் பிள்ளைகளோடு கொல்லையிலேயே சுருண்டு படுத்துவிட்டாள்.

மாற்றம் முன்னேற்றம்

இரவு ராமாயியே கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தாள். துளசியின் விஷயங்களை எல்லாம் பூவம்மா எடுத்துச்சொன்னாள். அதோடு தண்டனை கொடுப்பதாக இருந்தால் தனக்குக் கொடுக்க வேண்டுமென்றும் துளசியின் மீது எந்தத் தப்பும் இல்லை என்றும் கேட்டுக்கொண்டாள். பூவம்மா சொன்னதைக் கேட்டதும் ஒரு மஞ்சள் துண்டைத் தாலியாகக் கட்டி துளசியை ஊருக்குள் சேர்த்துவைத்தது நல்ல காரியமென்று நாட்டாமை மட்டுமல்ல; ஊரில் உள்ள மற்ற பெரியவர்களும் அவளைப் பாராட்டினார்கள். அது மட்டுமல்ல; இனி தாலியைத் தொலைத்தவர்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைக்க வேண்டாம். ஒரு முனை முறியா மஞ்சள் கிழங்கை எடுத்துத் தாலியாக நினைத்துக் கட்டி ஊருக்குள் சேர்த்துக்கொள்ளலாமென்றும் சொல்லிவிட்டார்கள். இந்த விஷயத்தில் பெண்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோசம். கமுக்கமாகத் தாலியை அடகு வைத்தவர்களும் விற்றவர்களும் தொலைத்தவர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டதோடு மறுநாளே வீட்டில் உள்ள ஒரு மஞ்சள் கிழங்கை எடுத்து ரகசியமாகத் தங்கள் தாலிக் கயிற்றில் கட்டிக்கொண்டார்கள். ஆக, அப்போதிருந்துதான் மஞ்சள் கிழங்கு தாலிக்கான அடையாளமாக மாறியது.

இப்படி அந்தக் காலத்தில் மனிதர்கள் கட்டுப்பாட்டோடு நடந்துகொண்டாலும் அவ்வப்போது மாற்றங்கள் வந்திருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் இந்த மஞ்சள் கிழங்கைப் போல் நல்ல மாற்றங்களாகவே இருந்திருக்கின்றன. இப்போது வரும் மாற்றங்கள் அப்படியானவையா? அதுவும் செல்போன் என்ற ஒரு பொருள் வந்தாலும் வந்தது. அது மனிதர்களின் உறுப்புகளோடு மற்றொரு உறுப்பாக மாறிவிட்டது. மாறியது மட்டுமல்ல, அது செய்யும் அலப்பறைகளைத் தாங்க முடியவில்லை. மனிதர்களை வெறிபிடித்தவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த அலைபேசியும் வீட்டில் தனக்கான ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு எந்த நேரமும் இரைந்து கொண்டிருக்கும் தொலைக்காட்சியும் முன்பு நல்லதே செய்து காணாமல்போன அம்மி, திருவை, நார்க்கட்டில்களைப் போல் காணாமல் போகாதா என்று இப்போது நிறைய மனிதர்கள் ஏக்கத்தோடு ஏங்கித் தவிக்கிறார்கள்.

கம்மங்காடு வெளஞ்சிருந்தா கையிருக்காது

காடுகளில் வயல்களில் மலைகளில் வனங்களில் ஆண்களும் பெண்களும் ஒன்றாகவே வேலைசெய்தார்கள். அப்போது பெண்கள் ரவிக்கைகூடப் போடுவதில்லை. சேலையை இறுக்கிப்பிடித்துத் தோள் வழியே கொண்டுவந்து இடுப்பைச் சுற்றிச் சொருகிவிட்டால் போதும். குளிக்கும்போது அவிழ்த்தால்தான் உண்டு. அந்தப் பெண்களுக்கெல்லாம் ஆண்கள்தான் காவலாக இருந்தார்கள். பதிமூன்று, பதினான்கு வயதுப் பெண்கள் எல்லாம் தரிசில் மாடு மேய்த்துக்கொண்டும் வெள்ளாமை நிறைந்த ஊடுவரப்பில் புல் அறுத்துக்கொண்டும் இருப்பார்கள். இளவட்டங்களும் அதே வரப்பையொட்டித்தான் தண்ணீ1ர் பாய்ச்சினார்கள். கமலை கட்டி இறைத்தார்கள். யாருக்கும் யாரைப் பார்த்தும் ஆசை வரவில்லை. எந்தப் பாலியல் பலாத்காரமும் இல்லை. எல்லோரும் ‘கறந்த மனதாக’ ஒருவருக்கொருவர் உதவியதோடு அவரவர் வேலைகளை மட்டும் பார்த்தார்கள். மச்சான்களையும் மாமன்களையும் கேலி பேசி வம்புக்கு இழுத்தார்கள். விளைந்த கம்மங்காட்டைப் பார்த்து இரண்டு கருதை அறுப்பார்கள். கையிலிட்டுக் கசக்கி உமி போக வாயால் ஊதுவார்கள். கருது அறுத்ததைப் பற்றிக் காட்டுக்காரர்கள் கேட்டால் “கம்மங்காடு வௌஞ்சிருந்தா கையிருக்காது, அம்மான் மவன கண்டா வாயிருக்காது” என்று சொல்லிவிட்டு ஓடுவார்கள். தாங்கள் வாழும் குடிசைகளிலிருந்து காடு முழுக்க ஆண்களும் பெண்களும் கலந்து இருந்தார்கள். எந்த வன்முறையும் இல்லை, அரிவாள் வெட்டும் இல்லை, அமில வீச்சும் இல்லை. அப்போதுள்ள மனிதர்கள் வன விலங்குகளையும் பாம்புகளையும் கண்டுதான் பயந்தார்கள். மனிதர்கள் யாருக்கும் பயப்படவில்லை. ஆணோ, பெண்ணோ ஒருவர் தோள் சார்ந்துதான் மற்றவர்கள் வாழ்ந்தார்கள்.

பங்காளிக்குள் சண்டை இருந்தது. கொடுக்கல் வாங்கலில் சண்டையிருந்தது. அதைக்கூடக் கல்யாணம், சடங்குகளில் சமரசமாக இரண்டு பெரியவர்களை வைத்துப் பேசி முடித்து சமாதானம் ஆனார்கள். விரோதமில்லை, வெட்டுக்குத்து இல்லை. எல்லோரும் கிணற்றில் தண்ணீர் எடுத்ததால் குழாய்ச் சண்டை இல்லை. ஊருக்குகள் இருக்கும் எல்லாருக்கும் எல்லோருடைய உதவியும் தேவையாக இருந்தது.

சோளக் கஞ்சியைக் காய்ச்சினால் மற்ற சோறுகளைப் போல் அப்படியே இறக்கிவிட முடியாது. வெந்து முடிந்ததும் அதை அப்படியே விட்டுவைக்க வேண்டும். அதோடு அடுப்புக்குள் நிறைய எருவைத் திணித்துவிட்டு அரைமணி நேரம் தீயின் கங்குளோடு அந்தச் சோறு அடுப்பிலேயே இருக்க வேண்டும். அப்போதுதான் சோளச் சோறு வெந்து மலர்ந்து இருக்கும். இப்படி வெந்து மலரும்போது மேல தண்ணியாகவும் கீழே சோறாகவும் இருக்கும். இதைப் பிரட்டிபோட வேண்டும். அதாவது துடுப்பால் எல்லாவற்றையும் ஒன்றாகக் கிண்டி விடவேண்டும். இதை உடனே செய்ய முடியாது. அரை மணி நேரம் கழித்துத்தான் செய்ய வேண்டும். அவசரமாய்ப் பிஞ்சை வேலைக்குப் போகிறவர்கள் இதைச் செய்ய முடியாது. அதனால், அடுத்தவர் உதவி வேண்டும். மாடுகளில் பால் கறக்க வேண்டும். இல்லாவிட்டால் அது ம்மா.. ம்மா.. என்று கத்திக் கூப்பாடு போட்டு ஊரையே கூட்டிவிடும். வீட்டிலிருக்கும் சிறு ஆட்டுக்குட்டிகளுக்குக் கொளை கட்ட வேண்டும் தானியங்களைக் குத்துபவர்களுக்குப் புடைத்துப்போட வேண்டும். இன்னும் பல வேலைகள் எல்லாருடைய வீடுகளிலும் இருந்தன.

(நிலா உதிக்கும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x