Last Updated : 21 Sep, 2016 11:09 AM

 

Published : 21 Sep 2016 11:09 AM
Last Updated : 21 Sep 2016 11:09 AM

குழந்தைகளைக் கொண்டாடிய எழுத்தாளர்கள்

உங்கள் 'மாயா பஜா'ருக்கு மூன்று வயது முடிந்து, நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நேரத்தில் குழந்தைகளின் வாசிப்புக்காக உழைத்த சில எழுத்தாளர்கள் சிலரைப் பற்றித் தெரிந்துகொள்ளலாமா? +

குழந்தைகளுக்காக இந்திய எழுத்தாளர் ஒருவர் எழுதிய முதல் படைப்பு என்று பார்த்தால், அது வங்க எழுத்தாளர் ஈஸ்வரசந்திர வித்யாசாகர் எழுதிய ‘வேதாள பஞ்சவிம்ஷதி' (1847) என்ற புத்தகத்தை சொல்லலாம். இது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கான பல கதைகளை அவர் மொழிபெயர்த்தும் உள்ளார்.

இந்தியக் காடு ஒன்றை மையமாக வைத்து ஆங்கில எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங் எழுதிய ‘தி ஜங்கிள் புக்' (1894) இன்றளவும் புகழ்பெற்றிருக்கிறது. இது திரைப்படமாகவும் பல முறை வந்து வெற்றி பெற்றிருக்கிறது.

இலக்கிய நோபல் பரிசு வென்ற ஒரே இந்தியரான ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘வால்மீகி பிரதீபா', இந்தியாவில் குழந்தைகளுக்காக எழுதப்பட்ட முதல் நாட்டிய நாடகம்.

ரவீந்திரநாத் தாகூரின் சகோதரர் அபனிந்திரநாத் தாகூர், ஸ்வீடன் பெண் எழுத்தாளர் செல்மா லாகர்லாஃப் எழுதிய ‘தி ஒண்டர்புல் அட்வென்ச்சர்ஸ் ஆஃப் நில்ஸ்' என்ற குழந்தைகள் கதையைத் தழுவி ‘புரோ அங்கலா' என்ற பெயரில் வங்க மொழியில் எழுதினார். இதுவே இந்தியாவில் முதலில் தழுவி எழுதப்பட்ட குழந்தைகள் படைப்பாக இருக்க வேண்டும்.

ரவீந்திரநாத் தாகூர் எழுதிய சில குழந்தைக் கதைகளுக்கு புகழ்பெற்ற வங்க ஓவியர் நந்தலால் போஸ் ஓவியமும் வரைந்துள்ளார். இந்த வங்கக் கதை பின்னால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, அதே ஓவியத்துடன் வெளியாகிப் புகழ்பெற்றது.

ஆங்கிலத்தில் எழுதிய முதல் இந்தியக் குழந்தை எழுத்தாளர் வங்கத்தைச் சேர்ந்த தனகோபால் முகர்ஜி. அவர் எழுதிய முதல் நூல் ‘கரி தி எலிஃபென்ட்' (1922). காட்டுயிர்கள் தொடர்பான நுணுக்கமான அறிவைப் பிரதிபலித்தது இந்த நூல்.

இந்திய மொழிகள் ஒன்றில் குழந்தைகளுக்காக வெளியிடப்பட்ட முதல் கலைக்களஞ்சியம் மலையாள மொழியில் வெளியானது. இதைத் தொகுத்தவர் மேத்யு எம். குழிவேலி.

குஜராத்தைச் சேர்ந்தவர் மாற்றுக் கல்வியாளர் கீஜுபாய் பாதேகா. இவர் குழந்தை களுக்காக குஜராத்தி மொழியில் 200-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் பல இன்றும்கூட பரவலாக வாசிக்கப்படுகின்றன.

இந்திய ஆங்கில எழுத்தாளர் ஆர்.கே. நாராயண் எழுதிய குழந்தைகளை மையமாகக் கொண்ட புகழ்பெற்ற நாவல் ‘சுவாமியும் நண்பர்களும்'. இது எழுதப்பட்ட ஆண்டு, 1935. இந்த நாவல் தமிழிலும் கிடைக்கிறது.

குழந்தைகளுக்காக அதிகம் எழுதிய இந்திய ஆங்கில எழுத்தாளர் டேராடூனைச் சேர்ந்த ரஸ்கின் பாண்ட். இவர் தன்னுடைய 16-வது வயதிலேயே ‘அன்டச்சபிள்' (1951) என்ற சிறுகதையை எழுதினார். இவர் கணக்கற்ற குழந்தைப் புத்தகங்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x