Published : 12 Mar 2023 05:52 AM
Last Updated : 12 Mar 2023 05:52 AM

நீங்கள் இந்தியாவின் பெருமை - சானியாவுக்கு பிரதமர் பாராட்டு

புதுடெல்லி: இந்தியாவின் பெருமை சானியா மிர்சா என புகழாரம் சூட்டியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

6 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சா கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற போட்டியுடன் சர்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் சானியா மிர்சாவின் டென்னிஸ் வாழ்க்கையை பாராட்டி அவருக்கு கடிதம் எழுதி உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

அதில் கூறியிருப்பதாவது: இந்திய விளையாட்டில் அழியாத முத்திரையை நீங்கள் பதித்துள்ளீர்கள். இது அடுத்த தலைமுறை வீரர்களுக்கு இது உத்வேகம் அளிக்கும். உங்களின் சிறப்பான ஆட்டத்தால், இந்தியாவின் விளையாட்டுத் திறமையை உலகமே பார்த்தது. நீங்கள் விளையாடத் தொடங்கியபோது, இந்தியாவின் டென்னிஸ் நிலப்பரப்பு மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஆனால் நீங்கள் விளையாடிய விதம் பெண்கள் பலர் டென்னிஸ் விளையாட்டை விளையாடலாம், அதில் சிறந்து விளங்கலாம் என்பதை உணர்த்தியது.

6 வயதில் தொடங்கிய உங்கள் டென்னிஸ் பயணத்தை அற்புதமாக கூறியிருந்தீர்கள். டென்னிஸ் கோர்ட்டுக்கு செல்ல போராடியதில் இருந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் உலகத்தரம் வாய்ந்த வீராங்கனையாக உருவெடுத்த வரையிலான பயணத்தை அற்புதமாக கூறினீர்கள். இந்தியாவுக்காக பதக்கங்களை வென்றது உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். நீங்கள் இந்தியாவின் பெருமை என்று என்னால் கூற முடியும். உங்கள் வெற்றி ஒவ்வொரு இந்தியனின் இதயங்களையும், மனதையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் நிரப்பி உள்ளது. இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடித்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள சானியா மிர்சா, “இதுபோன்ற அன்பான மற்றும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் எப்போதும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன். மேலும் இந்தியாவைப் பெருமைப்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x