Published : 08 Mar 2023 07:53 PM
Last Updated : 08 Mar 2023 07:53 PM

டெஸ்ட் போட்டிகள் இரண்டரை நாட்களில் முடிவது நல்லதல்ல: கவுதம் கம்பீர் கருத்து

மும்பை: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இரண்டரை நாட்களில் முடிவது பாராட்டத்தக்கது அல்ல என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் முதல் 3 டெஸ்ட் போட்டிகள் ஐந்து நாட்கள் முழுவதுமாக நடைபெறாத சூழலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“பந்துகள் சுழலும் தன்மை கொண்ட ஆடுகளங்களில் விளையாடுவதால் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், அதேநேரத்தில் டெஸ்ட் போட்டிகள் இரண்டரை நாட்களில் முடிவது பாராட்டத்தக்கது அல்ல. ஆட்டத்தில் நெருக்கமான முடிவுகள் இருக்க வேண்டும். அண்மையில், இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி போல ஆட்டம் இருக்க வேண்டும்.

புஜாரா, கோலி, ரோகித் போன்ற வீரர்கள் அனைவரும் சுழலுக்கு எதிராக சிறப்பாக விளையாடக் கூடிய வீரர்கள். அப்படி இல்லையென்றால் அவர்களால் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்க முடியாது. இன்றைய சூழலில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் முடிவு ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என நான் கருதுகிறேன்” என கம்பீர் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகள் 5 நாட்கள் வரை நீடிக்க வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும். தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மூன்று நாட்கள்தான் நடந்தது. பாகிஸ்தானில் ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் சலிப்பை தருவதாக மக்கள் சொல்லியுள்ளனர். நாங்கள் அதை சுவாரஸ்யமாக அளிக்கிறோம் என மூன்றாவது போட்டியின் முடிவின்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சொல்லி இருந்தார். இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் மூன்று நாட்களுக்குள் முடிவதாக விமர்சனம் வைக்கப்பட்ட நிலையில் அவர் இதனை அப்போது தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x