Published : 06 Mar 2023 06:55 PM
Last Updated : 06 Mar 2023 06:55 PM

ஏன் இப்படி பிட்ச் போடுறாங்க? - சுனில் கவாஸ்கர், இயன் சாப்பலின் இரு துருவப் பார்வைகள்

சுனில் கவாஸ்கர் மற்றும் இயன் சாப்பல் | கோப்புப்படம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி மார்ச் 9-ம் தேதி அகமதாபாத்தில் 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்தத் தொடரை ஆஸ்திரேலியா சமன் செய்ய விரும்பும். மேலும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று விட்டனர், அதனால் ஓரளவுக்கு அவர்கள் பிரஷர் இல்லாமல் சுதந்திரமாக ஆட முடியும். எப்போதும் சுதந்திரமாக ஆடக்கூடிய ஆஸ்திரேலிய அணி படு அபாயகரமானது என்பதை இந்திய அணியினர் அறிவார்கள்.

கடந்த 3 டெஸ்ட் போட்டிகளுமே சேர்த்து மொத்தமே ஏழரை நாட்கள்தான் நடந்தன. அந்த அளவுக்கு ‘வயல்வெளி’, கிடுகிடு குழிப்பிட்ச்களைப் போட்டனர், அதில் விவரம் தெரிந்த ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்சியில் கடந்த டெஸ்ட்டில், அட்டாக்கிங் கேப்டன்சியினால் ஆஸ்திரேலிய அணி இந்தியாவைப் பந்தாடியது.

ஐசிசி மனது வந்து இந்தூர் பிட்சிற்கு கண்டனம் தெரிவித்து, படுமோசம் என்று கூறி மூன்று தகுதி இழப்புப் புள்ளிகளை அளித்தது. பொதுவாக வங்கதேசம், இலங்கை போன்ற வலுவற்ற அணிகள்தான் இத்தகைய மண் பிட்சை, குண்டு குழிப் பிட்சைப் போடுவார்கள். ஆனால் நம்பர் 1 இந்திய அணி என்று கூறிக்கொண்டு இத்தகைய பிட்ச்களைப் போட்டு ஜெயித்து விட்டு அதில் பெருமை பேசுவது பெரிய நகைமுரண் ஆகும்.

இந்நிலையில், சுனில் கவாஸ்கர் இப்படி பிட்ச் போடுவதற்கான காரணங்களைக் கூறும்போது, “இந்தியாவில் 20 விக்கெட்டுகளை ஒரு டெஸ்ட் போட்டியில் கைப்பற்றுவது கடினம். இந்திய அணியில் முக்கிய பவுலர்களான ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, சற்றே அனுபவமில்லாவிட்டாலும் முகமது சிராஜ் முதலியோர் இல்லாமல் இந்தியப் பந்து வீச்சு அவ்வளவு பலம் வாய்ந்ததாக இல்லை. அதனால்தான் வறண்ட பிட்சைப் போட்டு 20 விக்கெட்டுகளை எடுக்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னேற இந்திய அணிக்கு வேறு வழி தெரியவில்லை. வலுவான பவுலர்கள் இருந்தால் ஸ்பின்னர்களை மட்டுமே நம்பாமல் ஒரு பிட்சைப் போட்டு ஆடலாம். பந்து வீச்சில் வலு இல்லை. எனவே நம் பலம் ஸ்பின்னர்கள்தான். அதற்கேற்ப பிட்சை அமைப்போம் என்று கருதுகின்றனர். மட்டைப் பிட்சைப் போட்டு பேட்டர்கள் ஆதிக்கம் செலுத்தும் பிட்ச்கள் அல்ல இவை, இவை பேட்டர்களின் பொறுமைக்கு சவால் அளிக்கும் பிட்ச்” என்று கூறுகிறார் கவாஸ்கர்.

இது ஒரு விதத்தில் குழிப்பிட்சுக்கு முட்டுக்கொடுத்தலே. கவாஸ்கர் கேப்டனாக இருந்த காலத்தில் தன் பேட்டிங்குக்குச் சாதகமாக சதம் அடிப்பதற்காகவே மட்டைப் பிட்ச்களை அமைக்கச் சொல்வார் என்ற விமர்சனங்கள் அப்போது அவர் மீது எழுந்தன.

பிட்ச் விவகாரத்தில் இயன் சாப்பல் கூறுவதுதான் இன்னும் பொருத்தமானதோடு என்பதோடு விமர்சன பூர்வமானதாகவும் உள்ளது. இந்திய அணியினர் வாயை மூடிக்கொண்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என இயன் சாப்பல் தெரிவித்துள்ளார்.

“இந்தியா தங்களது வழிமுறைகளின் தவறுகளை உணர வேண்டும். இந்திய அணிக்குச் சாதகமாக பிட்ச் அமைப்பதை பற்றி நாம் ஏற்கெனவே பேசியிருக்கிறோம். இந்தியா என்ன ஆஸ்திரேலியாவுக்கு வந்து கடந்த 2 டெஸ்ட் தொடர்களிலும் வென்றதை மறந்து விட்டனரா என்ன? நான் அதற்கு மீண்டும் செல்கிறேன்.

பிட்ச் போடுவதில் பிட்ச் அமைப்பாளர் தவிர ஏனையோரான, நிர்வாகிகள், அணி நிர்வாகம், பயிற்சியாளர், கேப்டன் ஆகியோருக்கு என்ன வேலை? இவர்கள் ஏன் பிட்ச்சை இப்படி போடு, அப்படி போடு என்று சொல்ல வேண்டும்? பிட்ச் தயாரிப்பாளர் விருப்பத்திற்கு விட்டு விட வேண்டியதுதான், அவர் அமைக்கும் பிட்சில் வாயை மூடிக்கொண்டு இவர்கள் ஆட வேண்டியதுதான். அவர் தனக்கு எது நல்ல பிட்ச் என்று தெரிகின்றதோ தன் அனுபவத்திலும் தன்னுடைய கற்றறிந்த திறத்திலும் பிட்ச் அமைக்கட்டுமே என்ன கெட்டு விடப்போகின்றது?

எங்களுக்கு இந்த மாதிரியான பிட்ச்கள் தான் வேண்டும் என்று இந்தியா கேட்டால் அந்த அணி மீது எனக்கு எந்த வித கருணையும் கிடையாது. அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் பிட்ச் அமைப்பாளரிடம் இந்திய அணி போய் ஏதாவது கோரினால் அவர் ‘உங்கள் வேலையப் பாருங்கள்’ என்று சொல்ல வேண்டும். இந்திய அணியினரும் வாயை மூடிக்கொண்டு கிரிக்கெட் ஆட்டத்தில்தான் கவனம் செலுத்த வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு வந்து நல்ல ஆல்ரவுண்ட் கிரிக்கெட்டை ஆடி வென்றதை மறந்து விட்டார்களா என்ன இந்திய அணியினர்? என்ன ரிஷப் பந்த் இங்கு இல்லை. இப்போது இவர்களுக்குப் புரிந்திருக்கும் ரிஷப் பந்த் எப்படி முக்கியமானவர் என்று” இவ்வாறு கூறினார் இயன் சாப்பல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x