Published : 15 Sep 2017 10:04 AM
Last Updated : 15 Sep 2017 10:04 AM

இந்தியா - கனடா இன்று மோதல்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இந்தியா, கனடா அணியுடன் இன்று மோதுகிறது.

இந்தியா - கனடா அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் பிளே ஆப் இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை கனடாவின் எட்மான்டன் நகரில் நடைபெறுகிறது. இந்திய அணியில் யுகி பாம்ப்ரி, ராம்குமார் ராமநாதன், சாகேத் மைனேனி, ரோகன் போபண்ணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கனடா அணி 18 வயதான இளம் வீரரான ஷாபலோவ் தலைமையில் களமிறங்குகிறது. அந்த அணியில் 82-ம் நிலை வீரரா வசக் போஸ்பிஸில், இரட்டையர் பிரிவில் முன்னணி வீரரான டேனியல் நெஸ்டர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஷாபலோவ், உலகத் தரவரிசையில் 51-வது இடத்தில் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மான்ட்ரியல் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடாலை வீழ்த்தி அதிர்ச்சி அளித்திருந்தார்.

மேலும் கடந்த வாரம் முடிவடைந்த அமெரிக்க ஓபனில் 4-வது சுற்று வரை முன்னேறியிருந்தார். இதன் மூலம் அமெரிக்க ஓபனில் குறைந்த வயதில் 4-வது சுற்றில் கால்பதித்த வீரர் என்ற பெருமையையும் ஷாபலோவ் பெற்றிருந்தார். இதுதவிர சமீபத்திய ஆட்டங்களில் அர்ஜென்டினாவின் ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோ, பிரான்சின் சோங்கா ஆகியோரையும் ஷாபலோவ் வீழ்த்தி உள்ளார்.

இந்திய அணி தரவரிசையில் 154-வது இடத்தில் உள்ள ராம்குமார் ராமநாதனை பெரிதும் நம்பி உள்ளது. அவர் சமீபத்தில் நடைபெற்ற ஆட்டங்களில் முன்னணி வீரர்களான பிரான்சின் மோன்பில்ஸ், ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் ஆகியோரை வீழ்த்தியிருந்தார். இதேபோல் 157-வது இடத்தில் உள்ள யுகி பாம்ப்ரியும் நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரராக உள்ளார். இவர்கள் இருவருக்கும் ஷாபலோவ் கடும் சவாலாக இருப்பார் என கருதப்படுகிறது.

அதேவேளையில் வசக் போஸ்பிஸிலை எதிர்கொள்வதில் ராம்குமார் மற்றும் பாம்ப்ரிக்கு நெருக்கடிகள் இருக்காது என கருதப்படுகிறது. அவர் தரவரிசையில் இந்திய வீரர்களை விட முன்னிலை வகித்த போதும், அவர் பங்கேற்ற கடைசி 5 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த நிலையில்தான் தற்போது டேவிஸ் கோப்பையில் விளையாட உள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற அமெரிக்க ஓபனில் வசக் போஸ்பிஸில் முதல் சுற்றுடன் வெளியேறிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x