Published : 04 Mar 2023 05:56 AM
Last Updated : 04 Mar 2023 05:56 AM
மும்பை: மகளிர் பிரீமியர் லீக் டி 20 கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் ஜெயண்ட்ஸ் மோதுகின்றன.
மகளிர் பிரீமியர் லீக் டி 20 கிரிக்கெட் தொடரானது இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் தங்கள் விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல பெரிய அளவில் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்தத் தொடரில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன. மொத்தம் 21 போட்டிகள் நடைபெறுகின்றன. நாக் அவுட் போட்டி 24-ம் தேதியும் இறுதிப் போட்டி 26-ம் தேதியும் நடைபெறுகிறது.
இந்த மகளிர் கிரிக்கெட் திருவிழாவில் தொடக்க நாளான இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஹர்மான்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மும்பை அணியில் இங்கிலாந்தின் ஸ்கிவர் பிரண்ட், வேகப்பந்து வீச்சாளர் இஸ்ஸி வாங், நியூஸிலாந்தின் அமிலா கெர், தென்ஆப்பிரிக்காவின் சோலி ட்ரையான், மேற்கிந்தியத் தீவுகளின்ஹேலி மேத்யூஸ், ஆஸ்திரேலியாவின் ஹீதர் கிரஹாம் ஆகிய நட்சத்திர வீராங்கனைகள் உள்ளனர்.
இதில் இந்திய அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத் கவுர் 150, சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடைசி3 டி 20 உலகக் கோப்பை தொடரிலும் கவுர் தலைமையிலான இந்தியஅணி நாக் அவுட் சுற்று வரை சென்றிருந்தது.
குஜராத் ஜெயண்ட்ஸ் அணியானது சாம்பியான ஆஸ்திரேலியாவின் பெத் மூனி தலைமையில் களமிறங்குகிறது. இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனைகளான ஹர்லின் தியோல், சினே ராணா, சுஷ்மா வர்மா ஆகியோர் அணியில் உள்ளனர். இவர்களுடன் வெளிநாட்டு வீராங்கனைகளான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர், ஜார்ஜியா வேர்ஹாம் மேற்கிந்தியத் தீவுகளின் தியேந்திரா டாட்டின், இங்கிலாந்தின் சோபியா டங்க்லி ஆகியோரும் பலம் சேர்க்கக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT