Published : 01 Mar 2023 05:08 PM
Last Updated : 01 Mar 2023 05:08 PM

IND vs AUS 3-வது டெஸ்ட் | முதல் நாளில் 265 ரன்கள், 14 விக்கெட்டுகள்: ஆஸி. முன்னிலை

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டி

இந்தூர்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. முதல் நாளில் இரு அணிகளும் இணைந்து 265 ரன்கள் எடுத்துள்ளன. இன்றைய நாளில் 14 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இந்தச் சூழலில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இருந்தும் முதல் இன்னிங்ஸில் 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 109 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது இந்தியா. அதிகபட்சமாக கோலி 22 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி பேட்ஸ்மேன்கள் முறையான பார்ட்னர்ஷிப் அமைக்க தவறினர். ஆஸ்திரேலிய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குனேமன், 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட், 9 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த லபுஷேன் உடன் 96 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் கவாஜா. லபுஷேன், 91 பந்துகளை எதிர்கொண்டு 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். 60 ரன்கள் எடுத்த நிலையில் கவாஜா வெளியேறினார். பின்னதாக வந்த கேப்டன் ஸ்மித், 26 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் கேமரூன் கிரீன் களத்தில் உள்ளனர். ஆஸி. அணியின் 4 விக்கெட்டுகளையும் ஜடேஜா கைப்பற்றி உள்ளார். முதல் இன்னிங்ஸில் 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலியா. நாளைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் எஞ்சியுள்ள 6 விக்கெட்டுகளை விரைந்து கைப்பற்ற இந்திய அணி பவுலர்கள் முயற்சிப்பார்கள். ஆஸி. அதை தவிர்க்க முயற்சிக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x