Published : 23 Dec 2022 01:53 PM
Last Updated : 23 Dec 2022 01:53 PM

18 Years Of Dhonism | 2004-ல் இதே நாளில் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மகத்தான வீரர்!

தோனி | கோப்புப்படம்

18 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார் மகேந்திர சிங் தோனி எனும் மகத்தான வீரர். கிரிக்கெட் உலகின் ஆல் டைம் சிறந்த வீரராக, கேப்டனாக அவர் இருப்பார் என அப்போது யாருமே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவர் கடந்து வந்த பாதையை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்ப்போம்.

காலச்சக்கரத்தை அப்படியே பின்னோக்கி இதே நாளில் கடந்த 2004-க்கு சுழற்றினால் வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் உள்ள எம்ஏ அஜீஸ் மைதானத்தில் தனது சர்வதேச என்ட்ரியை கொடுத்தார் தோனி. முதல் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஒரே பந்தில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அவர் விளையாடிய முதல் நான்கு ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானார். அப்போது அவருக்கு வயதும் 23 தான்.

பின்னர் 2005 ஏப்ரலில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 123 பந்துகளில் 148 ரன்கள் விளாசி தான் யார் என்பதை நிரூபித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். அதே ஆண்டில் இலங்கை அணிக்கு எதிராக 183 ரன்கள் விளாசினார். அதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அவதரித்தார்.

தொடர்ந்து சர்வதேச டி20 கிரிக்கெட் அறிமுகம் என அவரது கிரிக்கெட் வாழ்வின் கிராப் ஏறுமுகத்தில் இருந்தது. நீளமான தலைமுடி, அதிரடி ஆட்டம் என கிரிக்கெட் ரசிகர்களை தோனி தனது காந்த சக்தியால் ஈர்த்தார். அந்த ஈர்ப்பு இமியளவும் இன்று வரை குன்றாமல் உள்ளது.

2007 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை திறம்பட வழிநடத்தி சாம்பியன் பட்டம் வெல்ல செய்தார். அப்படியே 2011 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அவர் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் ஆனது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் வென்றார். அதன் மூலம் ஐசிசி நடத்தும் அனைத்து தொடர்களிலும் வென்ற கேப்டன் என்ற புகழை பெற்றார்.

அவரது சிறப்பான இன்னிங்ஸில் 2011 இறுதிப் போட்டி ஆட்டமும் அடங்கும். அந்தத் தொடர் முழுவதும் அடக்கி வாசித்த தோனி அந்தப் போட்டியில் ஆர்ப்பரித்து எழுந்தார். 79 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார். சிக்ஸர் விளாசி ஆட்டத்தையும், கோப்பையையும் வென்றார். கடந்த 2020, ஆகஸ்ட் 15 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

சர்வதேச சாதனை துளிகள்: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை நாட்-அவுட் ஆகாத பேட்ஸ்மேனாக உள்ளார். மொத்தம் 84 முறை விக்கெட்டை இழக்காமல் பெவிலியன் திரும்பி உள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர்.

தற்போது ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமகனாக உள்ளார். அவர் தலைமையில் சென்னை அணி நான்கு முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது.

கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத தருணம்: “எனது கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்றால் அது 2007 டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு மும்பை திரும்பிய எங்களுக்கு கிடைத்த எல்லையற்ற அன்பும், 2011 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மைதானத்தில் குழுமியிருந்த ஒட்டுமொத்த மக்களும் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடிய அந்த தருணமும்தான்.

எப்போதுமே நாடுதான் எனது மிகப்பெரிய மோட்டிவேஷன். அணியின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டும் என விரும்புவேன்” என தோனி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x