Published : 23 Dec 2022 11:45 AM
Last Updated : 23 Dec 2022 11:45 AM

கரும்புடன் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி விவசாயிகளின் நலனை காக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: தமிழக அரசே விவசாயிகளிடமிருந்து நேரடியாக பொங்கல் கரும்பை கொள்முதல் செய்து, உழவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "தமிழகத்தில் தமிழர் திருநாளையொட்டி, அரிசி அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு தமிழக அரசு அளிக்கவிருக்கும் பரிசுத் தொகுப்பில் பொங்கல் கரும்பு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. இது கரும்பு உழவர்கள் நலனை கடுமையாக பாதிக்கும்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டும் அதே நடைமுறையே தொடரும்; அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கான ஏக்கரில் உழவர்கள் பொங்கல் கரும்பு சாகுபடி செய்திருக்கின்றனர்.

பொங்கல் கரும்பை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது. பொங்கலுக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் தமிழக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால் வெளிச்சந்தையில் கரும்பு விலை வீழ்ச்சியடையும். அந்த விலைக்கு விற்றால் விதை வாங்கிய செலவைக் கூட உழவர்களால் ஈடு செய்ய முடியாது.

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதில் கடந்த ஆண்டு குளறுபடிகள் நடந்தது உண்மை. அதற்கு நிர்வாகத்தில் நடந்த தவறுகள் தான் காரணம் ஆகும். அதைக் காரணம் காட்டி பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்குவதை நிறுத்தியதால், உழவர்கள் தான் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஜனவரி 2 ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ள பரிசுத் தொகுப்பில் கரும்பை அரசு சேர்க்க வேண்டும். ஒரு கரும்பு ரூ.35 என்ற விலையில் தமிழக அரசே உழவர்களிடமிருந்து நேரடியாக பொங்கல் கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும். அதன் மூலம் உழவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்." என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x