Published : 18 Aug 2022 05:58 PM
Last Updated : 18 Aug 2022 05:58 PM

மலைக்க வைக்கும் நம்பர்களுடன் கோலியின் சாதனைத் தடங்கள் - ஒரு பார்வை | 14 years of Virat Kohli

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் களத்தில் தடம் பதித்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அவர் கடந்து வந்துள்ள இந்த பாதையில் பதிவு செய்துள்ள சில சாதனைத் தடங்களை ரீவைண்ட் செய்வோம்.

மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரராக போற்றப்பட்டு வருகிறார் விராட் கோலி. கிரிக்கெட் உலகின் ரெக்கார்டு புத்தகத்தில் அநேக இடங்களில் அவரது பெயர் இடம் பிடித்திருக்கும். இன்றைய இந்திய கிரிக்கெட் அணியின் புலிப் பாய்ச்சலுக்கு காரணகர்த்தாவான வீரர்களில் ஒருவர் அவர்.

கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் (2008) இதே நாளில் இலங்கை மண்ணில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சேவாக் மற்றும் சச்சினுக்கு மாற்று வீரராக சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுக வீரராக விளையாடினார் கோலி. முதல் போட்டியில் 12 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஐந்து போட்டிகள் கொண்ட அந்தத் தொடரின் நான்காவது போட்டியில் 66 பந்துகளுக்கு 54 ரன்கள் எடுத்திருந்தார். அதுதான் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அவர் பதிவு செய்த முதல் அரை சதம்.

  • உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார் கோலி. மலேசியாவில் நடைபெற்ற அண்டர் 19 உலகக் கோப்பை - 2008 தொடரில் அவரது தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் மூலம் லைம் லைட்டுக்குள் வந்தார். தொடர்ந்து இந்திய அணியிலும் இடம் பிடித்தார்.
  • தனக்கு கிடைத்த வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக் கொண்டார் கோலி. அதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டில் தன்னை ஒரு கிளாஸான வீரர் என நிரூபித்தார்.
  • தனது 14-வது ஒருநாள் போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்தார். 2010-இல் டி20 மற்றும் 2011-இல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்.
  • இதுவரையில் மொத்தம் 463 சர்வதேச போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) விளையாடி உள்ள அவர் 23,726 ரன்களை எடுத்துள்ளார்
  • இதில் 70 சதங்கள் மற்றும் 122 அரை சதங்கள் அடங்கும்.
  • ஒருநாள் கிரிக்கெட்டில் 262 போட்டிகளில் விளையாடி 43 சதங்கள் விளாசியுள்ளார். மொத்தம் 12344 ரன்கள் குவித்துள்ளார்.
  • சச்சின் டெண்டுல்கர், சங்கக்கரா, ரிக்கி பாண்டிங், ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே போன்ற ஜாம்பவான்களுக்கு அடுத்ததாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்துள்ள பேட்ஸ்மேனாக கோலி திகழ்கிறார்.
  • “இதெல்லாம் 14 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. இது எனக்கு கிடைத்த கவுரவம்” என சொல்லி வீடியோ ஒன்றையும் கோலி பகிர்ந்துள்ளார்.
  • தற்போது அவருக்கு 33 வயதாகிறது. எப்படி பார்த்தாலும் குறைந்தபட்சம் இன்னும் 3 ஆண்டுகள் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஆக்டிவாக விளையாடுவார். அந்த நாட்களில் அவர் மேலும் பல சாதனைகளை படைப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x