Last Updated : 18 Aug, 2022 04:49 PM

1  

Published : 18 Aug 2022 04:49 PM
Last Updated : 18 Aug 2022 04:49 PM

PS for 2K கிட்ஸ் - 9 | பொன்னியின் செல்வன் - நந்தினியின் உண்மை முகம் எது?

ஆ.மதுமிதா

கல்கியால் படைக்கப்பட்ட கற்பனைக் கதாபாத்திரங்களில் மிகவும் வித்தியாசமான, புரிந்துகொள்ள முடியாத, ஒரு 'காம்ப்ளக்ஸ்' ஆன கதாபாத்திரம் என்றால், அது நந்தினியாகத்தான் இருக்க வேண்டும். குந்தவை - நந்தினி, பழுவேட்டரையர்கள் பற்றிய முந்தைய பாகங்களில் நந்தினியைக் குறித்து மற்ற கதைமாந்தர்கள், இக்கதையின் ஆசிரியர் அமரர் கல்கி என பலரும் பலவாறாகக் கூறியதனை நாம்‌ கண்டோம்.

ஒரு நாள் முழுவதும் உட்கார்ந்து யோசித்து, பல தரப்பினரின் கருத்துகளை கேட்டு, கல்கி அவர்களை நந்தினியை பற்றி மட்டுமே ஒரு புத்தகம் எழுதச் செய்தாலும் கூட நந்தினியின் உண்மையான முகத்தையும் குணத்தையும் நம்மாலும் உணர முடியாது, அவராலும் விவரிக்க இயலாது என்பதே உண்மை.

நந்தினியின் கதாபாத்திரமானது கதையின் ஒவ்வொரு பாகத்திலும் வேறுபடும் ஒன்று. முதலில் ஆழ்வார்க்கடியான் கூறும் நந்தினியும், பின்னர் நாம் சந்திக்கும் நந்தினியும், ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்ட பிறகு தோன்றும் நந்தினியும் முற்றிலும் வேறுபடுவது போல தோன்றலாம். ஆனால், இத்தனை முகங்களிலுமிருந்து அவளின் உண்மையான முகம் எதுவென்று யூகிக்க முடியாத ஒன்று.

கதையின் தொடக்கத்தில், பெரிய பழுவேட்டரையர் ஓர் இளம் பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதைப் பற்றியும், அவள் மீது அவருக்கு இருந்த ஆசையைப் பற்றியும் கந்தமாறன் கேலி செய்து பேசுகிறான். பெரிய பழுவேட்டரையர் கடம்பூர் மாளிகைக்கு கூட அவர் ராணியை அழைத்து வந்தது போல போகும் இடமெல்லாம் அவளை பல்லக்கில் மூடுதிரை போட்டு அழைத்துக்கொண்டுப் போவதாக ஊரெல்லாம் பேசிக்கொண்டனர்.

ஆனால், நடுச்சாமத்தில் நடந்த கூட்டத்திலோ நந்தினியின் பல்லக்கில் இருந்து மதுராந்தகன் வெளியே வருவதைக் காணும் வந்தியத்தேவனைப் போன்றே நாமும் குழம்பிப் போகின்றோம். பின்னர், நந்தினியைக் குறித்து ஆழ்வார்க்கடியான் நம்பி கூறிய நம்ப இயலாத கதையைக் கேட்டு நாமே அவளை நினைத்து பரிதாபப்படுகிறோம்.

ஆழ்வார்க்கடியான் பாண்டிய நாட்டில் வைகை நதிக்கரையில் ஒரு கிராமத்தில் பிறந்தவன். அவனுடைய தந்தை ஒருநாள் நதிக்கரையில் உள்ள நந்தவனத்துக்குப் சென்றபோது அங்கே ஒரு பெண் குழந்தை அநாதையாகக் கிடப்பதைக் கண்டார். குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார். குழந்தை களையாகவும் அழகாகவும் இருந்தபடியால், நந்தினி என்று குழந்தைக்குப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். ஆழ்வார்க்கடியானும் அப்பெண்ணைத் தன் தங்கை என்று கருதி வளர்த்து வந்தான்.

நந்தினிக்குப் பிராயம் வளர்ந்து வந்ததுபோல பெருமாளிடம் பக்தியும் வளர்ந்து வந்தது. அவள் மற்றொரு 'ஆண்டாள்' ஆகிப் பக்தர்களையெல்லாம் ஆட்கொள்ளப் போகிறாள் என்று அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் நம்பினார்கள். இந்த நம்பிக்கை ஆழ்வார்க்கடியானுக்கு அதிகமாயிருந்தது. தந்தை இறந்த பிறகு அப்பெண்ணை வளர்க்கும் பொறுப்பை அவனே ஏற்றுக் கொண்டான். இருவரும் ஊர் ஊராகச் சென்று ஆழ்வார்களின் பாசுரங்களைப் பாடி வந்தார்கள். நந்தினி பக்திப் பரவசத்துடன் பாசுரம் பாடியதைக் கேட்டவர்கள் மதிமயங்கிப் போனார்கள்.

ஒரு சமயம் ஆழ்வார்க்கடியான் யாத்திரை சென்று திரும்பி வரக் காலதாமதமாகிவிட்டது. அப்போது நந்தினிக்கு ஒரு விபரீதம் நேர்ந்துவிட்டது. பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இறுதிப் பெரும்போர் மதுரைக்கு அருகில் நடந்தது. பாண்டியர் சேனை சர்வ நாசம் அடைந்தது. வீரபாண்டியன் உடம்பெல்லாம் காயங்களுடன் போர்க்களத்தில் விழுந்திருந்தான்.

அவனுடைய அந்தரங்க ஊழியர்கள் சிலர் அவனைக் கண்டுபிடித்து எடுத்து உயிர்தப்புவிக்க முயன்று பாண்டியனை நந்தினியின் வீட்டில் கொண்டுவந்து சேர்த்தார்கள். பாண்டியனுடைய நிலைமையைக் கண்டு மனமிறங்கி நந்தினியும் அவனுக்குப் பணிவிடை செய்தாள். ஆனால், சீக்கிரத்தில் சோழ வீரர்கள் அதைக் கண்டுபிடித்து வீட்டைச் சூழ்ந்து கொண்டு உட்புகுந்து வீரபாண்டியனைக் கொன்றார்கள். நந்தினியின் அழகைக் கண்டு மங்கிய பழுவேட்டரையர், அவளைச் சிறைப் பிடித்துக் கொண்டு போய்விட்டார்.

இதன் பின் மூன்று ஆண்டுகள் ஆகிய பிறகும் ஆழ்வார்க்கடியானால் நந்தினியைப் பார்க்கவே முடியவில்லை. அன்று முதல் ஒரு தடவையேனும் நந்தினியைத் தனியே சந்தித்துப் பேசி, அவள் விரும்பினால் அவளை விடுதலை செய்து கொண்டு போகவும் ஆழ்வார்க்கடியான் முயன்று கொண்டிருக்கிறான். இது வரையில் அம்முயற்சியில் வெற்றி காணவில்லை... இந்த வரலாற்றைக் கேட்ட வந்தியத்தேவனுடைய உள்ளம் உருகிவிட்டது. இதைக் கேட்ட நாமும் வந்தியத்தேவனைப் போலவே வரும் பாகங்களில் நந்தினி என்ற ஒரு பாவப்பட்ட அப்பாவிப் பெண்ணைப் பார்க்க ஆயத்தமாகின்றோம்.

ஆனால், ஆழ்வார்க்கடியான் கூறியதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, நாம் நினைத்தும் பார்த்திராத ஒரு நந்தினியை வந்தியத்தேவனின் கண்களால் நாம் சந்திக்க நேரிடுகிறோம். பெரிய பழுவேட்டரையர் போன்ற முதியவரைக் கட்டாயத் திருமணம் செய்து கொண்டு ஒரு கசப்பான வாழ்க்கையை வாழும் அப்பாவி இளம்பெண் போலல்லாமல், அழகு மட்டுமின்றி, தனக்கே உரித்தான அதிகாரமும் அந்தஸ்தும் சக்தியும் கொண்ட ஓர் இளம்பெண்ணைக் காண்கிறோம்.

வந்தியத்தேவனிடம் பழுவூர் மோதிரத்தை கொடுத்து தன் அரண்மனைக்குள் வருவதற்கு வழி வகுத்து தருகிறாள். பாண்டிய நாட்டு ஆபத்துதவி ரவிதாசனுக்கு பதில் வந்தியத்தேவனைக் கண்டு ஆச்சிரியமடைவாளே தவிர, அவனை எவ்விதத்திலும் சின்னப் பழுவேட்டரையரிடம் காட்டிக்கொடுக்க மாட்டாள்.

ரவிதாசனுடனான உரையாடலில் நந்தினி சோழ நாட்டுக்கு எதிராக சதி செய்வது தெரியவருகிறது. ஆனால், அதற்கான காரணம் என்ன?

இக்கதாபாத்திரத்தின் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், அவளைப் பற்றிய பல புதிய விஷயங்களை நாம் ஆழ்வார்க்கடியான், செம்பியன்மாதேவி, ஆதித்த கரிகாலன் என்று வெவ்வேறு கதாபாத்திரங்களிடமிருந்து அறிந்துகொள்கிறோம். கரிகாலர் தான் காதலித்த பெண்ணை தன்னிடமிருந்து பிரித்துவிட்டானே என்ற கோபத்திலும் ஆத்திரத்திலும் தான் காயப்பட்டு கிடந்த வீரபாண்டியனை கொன்றதாக கூறுவார். ஆதித்த கரிகாலன் கூறியது போல தன் 'காதலன்' என்று நந்தினி அழைத்த வீரபாண்டியனை கொன்றதால் பழி வாங்கும் நோக்கத்துடன் பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்துக்கொண்டாள். ஆனால் நந்தினி உண்மையிலேயே கரிகாலனை காதலித்தாளா அல்லது அவள் பட்டத்து இளவரசரை மணந்தால், அவர் வழி வரும் அதிகாரத்தை விரும்பினாளா என்பது சந்தேகம் தான். இதற்கு காரணம் நந்தினி சிறுவயதில் பழையாறையில் வளர்ந்தபோது அவள் நடத்தப்பட்ட விதமே.

குந்தவை இளவரசியாகப் பெற்ற செல்வாக்கைக் கண்டு பொறாமை கொண்டாள் நந்தினி. நந்தினியின் அழகைக் கண்டு பொறாமை கொண்டாள் குந்தவை. இதனால் நந்தினி, கரிகாலர் அவள் மீது கொண்ட ஆசையை அறிந்தவுடன் செம்பியன் மாதேவியால் பழையாறையை விட்டு அனுப்பப்படுகிறாள். இது நந்தினி மனதில் ஆழமாக பதிந்துவிட, சோழ ராஜ குடும்பத்தின் மீதே அவளுக்கு வெறுப்பும் கசப்பும் ஏற்படுகிறது.

ஆதித்த கரிகாலனிடம் வீரபாண்டியன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததை அவள் ஏன் சொன்னாள்? ஒருவேளை அவரை மேலும் வெறிப்பிடித்தவன் போல ஆக்குவதற்கு அப்படிச் சொன்னாளா? அப்படியானால், அவளது கணக்கு தப்பு என்றுதான் சொல்ல வேண்டும். அதன் விளைவுகள் இருவருக்கும் பயங்கரமானதாகவே இருந்தன. வீர பாண்டியனின் போரில் நந்தினி தன் வாழ்க்கையையே இழக்க, ஆதித்த கரிகாலன் குற்ற உணர்வின் காரணமாக அவர் மனதை இழக்கிறார்.

ஆதித்த கரிகாலனை பழிவாங்குவதற்காக பழுவேட்டரையரை மணந்து, அவரைத் தன் கைப்பாவையாக ஆக்குகிறாள். இளவரசர் மதுராந்தகனைச் சந்தித்து, சிவ வழிபாட்டைக் கைவிடும்படி அவனை வற்புறுத்தி, ஆதித்த கரிகாலனின் அரியணை உரிமைக்கு சவால் விடும் வகையில் அவனை தூண்டுகிறாள். கந்தமாறன், பார்த்திபேந்திர பல்லவன் போன்ற இளைஞர்களை தனது வளர்ந்து வரும் அபிமானிகளின் முகாமில் சேர்த்துக்கொள்கிறாள், மேலும், அவளுடைய இலக்குகளை அடைய பேசிப்பேசி மயக்கியே அவர்களைப் பயன்படுத்துகிறாள்.

ஒருவேளை, "எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே" என்பதைப் போல, சிறு வயதில் பழையாறையில் அவமதிக்கப்படாமல் இருந்திருந்தால் நந்தினி இப்படி 'நஞ்சினும் கொடியவள்' ஆக மாறியிருக்க மாட்டாலோ என்னவோ.

ஆதித்த கரிகாலனிடம் பாண்டிய மன்னனை மன்னித்து விட்டுவிட நந்தினி கெஞ்சியதும், அதைக் கேட்காமல் அவளை காலால் எத்தித் தள்ளிவிட்டு ஆத்திரத்தில் அவனைக் கொன்று தீர்த்ததும் நாம் அறிந்த கதையே. ஆனால், ஏன் பாண்டியனை கரிகாலனிடமிருந்து நந்தினி காப்பாற்ற முயற்சித்தாள்? உண்மையில் நந்தினியுன் காதலன் தான் வீரபாண்டியனா? நந்தினிக்கும் பாண்டிய மன்னனுக்கும் இடையில் என்ன உரையாடல் நிகழ்ந்தது? நந்தினியின் மேல் நிஜமாகவே காதல் கொண்டு ராணி ஆக்குகிறேன் என்று பாண்டியன் வாக்கு கொடுத்தானா இல்லை நந்தினியை மந்தாகினி என்று தவறாக நினைத்து விட்டானா? இதற்கு மேல் கதையை நான் சொன்னால் மிகப் பெரிய சஸ்பென்ஸ் உடைக்கப்பட வேண்டியிருக்கும். ஆதலால் வழக்கம்போல் நந்தினியைப் பற்றிய உண்மையை சொல்லாமலேயே இக்கட்டுரையை முடித்துக்கொள்கிறேன்.

| தொடரும்... |

முந்தைய அத்தியாயம்: PS for 2K கிட்ஸ் - 8 | பொன்னியின் செல்வன் - குந்தவை மீது பொன்னி நதி பாயும் தேசம் பாசம் கொள்வது ஏன்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x