Published : 18 Aug 2022 04:41 PM
Last Updated : 18 Aug 2022 04:41 PM

கல்வி தொலைக்காட்சி சிஇஓ நியமனம் | “அறிக்கை கிடைத்த பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை” - அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: "கல்வி தொலைக்காட்சி சிஇஓ நியமனம் குறித்து சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவரது பின்புலம் குறித்து விசாரிக்க அறிவுறுத்தியிருக்கிறோம். அதுதொடர்பான அறிக்கை கிடைத்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "நேர்முகத் தேர்வு நடத்திய பின்னரே மணிகண்ட பூபதி, கல்வி தொலைக்காட்சிக்கு தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். அமைச்சரின் கவனத்து வராமல் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள்.

கல்வி தொலைக்காட்சிக்கு தலைமை செயல் அதிகாரி நியமனத்தைப் பொறுத்தவரை, அவர்... அவருக்கு நண்பர், இவருக்கு நண்பர் என்பதைக் காட்டிலும், அதைத் தவிர்த்து அவரது பின்னணி குறித்து யாருக்குமே தெரியவில்லை.

இதனைத் தொடர்ந்து ‘இந்த நியமனம் தொடர்பாக சமூக வலைதளங்களில் இரண்டு நாட்களாக வைரலாகிறதே, இங்கெல்லாம் பணியாற்றியதாக கூறப்படுகிறதே, எனவே அவரது பின்புலம் குறித்து முதலில் விசாரித்து எனக்கு அறிக்கை சமர்ப்பியுங்கள், அதுவரை நியமனத்தை நிறுத்திவைக்க வேண்டும்’ என அறிவுறுத்தியிருக்கிறேன். அறிக்கை கிடைத்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, பள்ளி மாணவர்களுக்காக தொலைக்காட்சி வழியே கல்வியை அளிப்பதற்குத் தொடங்கப்பட்ட கல்வித் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு முதன்மை செயல் அலுவலராக (சிஇஓ) மணிகண்ட பூபதி என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு நியமனம் செய்துள்ளதாக தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, வலதுசாரி சிந்தனைக் கொண்ட ஒருவரை மாணவர்களுக்குக் கல்வி அறிவூட்டும் தொலைக்காட்சிக்கு முதன்மை செயல் அலுவலராக நியமனம் செய்திருப்பது சரியல்ல என்று சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x