

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் களத்தில் தடம் பதித்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அவர் கடந்து வந்துள்ள இந்த பாதையில் பதிவு செய்துள்ள சில சாதனைத் தடங்களை ரீவைண்ட் செய்வோம்.
மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரராக போற்றப்பட்டு வருகிறார் விராட் கோலி. கிரிக்கெட் உலகின் ரெக்கார்டு புத்தகத்தில் அநேக இடங்களில் அவரது பெயர் இடம் பிடித்திருக்கும். இன்றைய இந்திய கிரிக்கெட் அணியின் புலிப் பாய்ச்சலுக்கு காரணகர்த்தாவான வீரர்களில் ஒருவர் அவர்.
கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் (2008) இதே நாளில் இலங்கை மண்ணில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சேவாக் மற்றும் சச்சினுக்கு மாற்று வீரராக சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுக வீரராக விளையாடினார் கோலி. முதல் போட்டியில் 12 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஐந்து போட்டிகள் கொண்ட அந்தத் தொடரின் நான்காவது போட்டியில் 66 பந்துகளுக்கு 54 ரன்கள் எடுத்திருந்தார். அதுதான் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அவர் பதிவு செய்த முதல் அரை சதம்.