Last Updated : 11 Aug, 2022 05:41 AM

4  

Published : 11 Aug 2022 05:41 AM
Last Updated : 11 Aug 2022 05:41 AM

பதக்கத்தால் போரை நிறுத்திவிட முடியாது - பட்டம் வென்றும் மகிழ்ச்சியை கொண்டாடாத உக்ரைன் மகளிர் அணியினர்

சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்கப் பதக்கம் வென்றது. அந்த அணி தனது கடைசி சுற்றில் 3-1 என்ற கணக்கில் போலந்தை வீழ்த்தியிருந்தது. தொடர்ச்சியாக 9 வெற்றி, ஒரு டிராவை கண்டு அபார பார்மில் இருந்த போலந்தின் கியோல்பாசா ஒலிவியாவை, உக்ரைனின் உஷெனினா அனா எளிதாக சாய்த்தார். இந்த ஆட்டம் முடிவடைந்ததும் உஷெனினா அனா, அமைதியாக நடந்து வந்து தன் சக தோழியான நடாலியா புக்ஸாவின் தோள்களை தட்டிக்கொடுத்தார்.

உக்ரைன் வீராங்கனைகளிடம் சாம்பியன் பட்டம் வென்றுவிட்டோம் என்பதற்கான ஆரவாரமோ, மகிழ்ச்சிக்கான பாய்ச்சலோ இல்லை. மாறாக கண்ணீரும், அரவணைப்புகளும் மட்டுமே இருந்தன. காரணம்அவர்களது நாடு மீது ரஷ்யா தொடுத்துள்ள போர். லட்சக்கணக்கானோர் ரஷ்யப் படையெடுப்பை எதிர்கொண்டு, உயிருக்குத் தப்பியோடி, உணவு மற்றும்தங்குமிடத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கும்போது செஸ் ஒலிம்பியாட்டில் வென்றுள்ள மகத்தான வெற்றியை முழுமையாக, மனதார மகிழ்ந்து உக்ரைன் வீராங்கனைகளால் கொண்டாட முடியவில்லை.

தங்கப் பதக்கம் வென்ற பின்னர் தனது அணியின் கேப்டன் மைக்கேல் ப்ராட்ஸ்கியுடன் செய்தியாளர்களை சந்தித்த உஷெனினா அனா கூறும்போது, “பதக்கம் வென்றது சிறந்த உணர்வு, ஆனால் இந்த பதக்கத்தால் போரை நிறுத்திவிட முடியாது.

நாங்கள் ரஷ்ய எல்லைக்கு மிக அருகில் வாழ்ந்ததால் அதுஒரு பயங்கரமான நேரம். ரஷ்யர்கள் அணிவகுத்துச் செல்கிறார்கள் என்ற செய்தியைக் கேட்டவுடனேயே, வேறு வழியின்றி, எந்தத் தயார்நிலையும் இல்லாமல் நாங்கள் எங்கள் குடும்பத்துடன் ஓடிச் செல்வதை தவிர வேறு வழியில்லாமல் இருந்தோம்” என்றார்.

36 வயதான உஷெனினா அனா, ரஷ்யா எல்லையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கார்கிவ் நகரில் வசித்து வருகிறார். ரஷ்யாவின் படையெடுப்பால் இந்த நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உஷெனினா அனா இன்னும் தாயகம் திரும்பவில்லை. உக்ரைன் அணியில் உள்ள 5 வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் விவரிக்க ஒரு சோதனைகதை உள்ளது. அணியில் இடம் பெற்றுள்ள முசிச்சுக் சகோதரிகள், ஒஸ்மாக் யூலியா, புக்ஸா நடாலியா ஆகியோர் கூட போலந்து எல்லை வழியாக சென்னு ஜெர்மனி மற்றும்ஸ்பெயின் நாடுகளில் தங்கியுள்ளனர்.

அனா முசிச்சுக் கூறும்போது, ‘‘பிப்ரவரி 24-ம் தேதி காலை ஏழு மணியளவில் நான் கண் விழித்த போது சைரன் சத்தம் கேட்டது, இது ஒரு அதிர்ச்சியாக இருந்தது. என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருந்தது. செல்போனில் செய்தியை பார்த்தபோது பேரழிவு நடந்து கொண்டிருப்பதை கண்டு உறைந்து போனேன். எனது சகோதரியை எழுப்பி போர் தொடங்கிவிட்டது, எங்கு பார்த்தாலும் சைரன் சத்தம் கேட்பதாக கூறினேன்.

அன்று இரவு, விமானங்கள் நிறுத்தப்பட்டு, ரயில்கள் நிரம்பிய நிலையில், ஒரு பை மற்றும் மடிக்கணினியுடன் ஒரு நெரிசலான பேருந்தில் நானும் எனது சகோதரியும் போலந்து எல்லையை அடைந்தோம். நாங்கள் மிகவும் சோகமாக இருந்தோம், ஏனென்றால் நாங்கள் உக்ரைனை விட்டுவெளியேற விரும்பவில்லை. நான் எனது நகரத்தையும் எனது குடியிருப்பையும் விரும்புகிறேன். நாங்கள் அனைவரையும் விட்டுச்சென்றோம். எங்கள் பெற்றோர்கள், தாத்தா பாட்டி மற்றும் உறவினர்களில் பெரும்பாலானோர் இன்னும் உக்ரைனில் உள்ளனர்.

போலந்து எல்லையை 15 மணி நேரம் வரிசையில் காத்திருந்து கடக்க வேண்டியிருந்தது. அங்கு பொதுமக்கள் பல நாட்கள் வரிசையில் காத்திருந்தனர். நாங்கள் பேருந்தில் சென்றதால் சிறப்பு பாதை வழியாக எல்லையை கடந்துவிட்டோம். போலந்து எல்லையைத் தாண்டிய பிறகு நாங்கள் ஒரு கடையைக் கண்டுபிடித்தோம்.

ஆனால் நாங்கள் வைத்திருந்த பெரும்பாலான கிரெடிட் கார்டுகள் வேலை செய்யவில்லை. அதிர்ஷ்டவசமாக ஒரு கார்டு மட்டும் வேலை செய்தது. அதை வைத்து அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டோம்” என்றார்.

போர் சூழ்நிலையிலும் மன உறுதியுடன் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற உக்ரைன் மகளிர் அணி எந்தவித பதற்றமும் இல்லாமல் முதல் 4 சுற்றுகளில் தொடர்ச்சியாக வெற்றியை வசப்படுத்தியது. அடுத்த இரு சுற்றுகளை டிரா செய்தது. பின்னர் மீண்டெழுந்து நெதர்லாந்தை தோற்கடித்தது. 8 மற்றும் 9வது சுற்றுகளை டிராசெய்தது. 10வது சுற்றில் ஜெர்மனியை வீழ்த்தியிருந்தது.

கடைசி சுற்றிலும் உக்ரைன் அணியின் தலைவிதியானது அவர்களது கையில் இல்லாமலேயே இருந்தது. இந்திய ஏ அணியை அமெரிக்கா வீழ்த்திய அதேவேளையில் உக்ரைனும் தனது ஆட்டத்தில் வெற்றிபெற சாம்பியன் பட்டம் அந்த அணியின் வசமானது. அதேவேளையில் ஓபன் பிரிவில் உக்ரைன் அணி 29-வது இடத்தை பிடித்தது.

உக்ரைன் மகளிர் அணி மகுடம் சூடியதில் அனைத்து வீராங்கனைகளின் பங்களிப்பு அடங்கியிருந்தது. அனா முசிச்சுக், மரியா முசிச்சுக் சகோதரிகள் கூட்டாக 20-க்கு 13 புள்ளிகள் பெற்றனர். உஷெனினா 8 ஆட்டங்களில் விளையாடிய 6.5 புள்ளிகள் பெற்றார். நடாலியா புஸ்கா 10-க்கு 7 புள்ளிகள் சேர்த்தார். உக்ரைன் சிறந்த அணி அல்ல. இருந்தபோதும் அவர்கள்மிகவும் உறுதியாக விளையாடினர். அவர்களது நாட்டில் மோசமான நிலையை அவர்கள் சந்தித்து இருந்ததால், தங்களது ஆட்டத்தில் அழுத்தம் என்பதையே உணரவில்லை.

போர் பின்புலம் உக்ரைன் அணியின் வீராங்கனைகளை அமைதி உணர்வால் நிரப்பியது. இப்போது அவர்கள் விரும்புவது, உஷெனினா உறுதியாகச் சொன்னது போல், "அமைதி ஒன்று மட்டுமே”.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x