Published : 27 Jul 2022 07:13 PM
Last Updated : 27 Jul 2022 07:13 PM
துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஏழு ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக டாப் 4 இடங்களில் இடம்பிடிக்க தவறியுள்ளார் அவர்.
மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர், FAB4-களில் ஒருவர், ரன் மெஷின் என்றெல்லாம் போற்றப்படுபவர் கோலி. கடந்த ஆண்டு வரை அவர் எப்போது சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், இப்போது அவர் ரன் ஸ்கோர் செய்தாலே போதும் என்ற நிலை உருவாகி உள்ளது.
டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து ஃபார்மெட்டிலும் எதிரணியின் பந்துவீச்சை விரட்டி விரட்டி வெளுத்து வாங்கும் வல்லமை கொண்டவர் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 23,726 ரன்களை எடுத்துள்ளார்.
இருந்தும் இப்போது மோசமான ஃபார்ம் காரணமாக மூன்று ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் ரன் சேர்க்க தடுமாறி வருகிறார். அவருக்கு இந்திய அணியின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் கோலி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் கோலி. கடந்த 2015 அக்டோபருக்கு பிறகு முதல் முறையாக இந்த தரவரிசையில் டாப் 4 இடங்களை இப்போதுதான் தவறவிட்டு உள்ளார். இப்போது 774 புள்ளிகளுடன் கோலி உள்ளார்.
பாகிஸ்தானின் பாபர் அசாம், இமாம்-உல்-ஹாக் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் தென்னாப்பிரிக்க அணியின் ராசி வான்டர் டுசன் மற்றும் டிகாக் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT