Published : 20 Jul 2022 09:50 PM
Last Updated : 20 Jul 2022 09:50 PM
மும்பை: வெகு விரைவில் தொடங்க உள்ள தென்னாப்பிரிக்க டி20 லீக் கிரிக்கெட் தொடருக்கான அணிகளை வாங்கும் பணியில் ஆறு ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் மும்முரமாக உள்ளனர். அதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டு லீக் தொடரில் பங்கேற்று விளையாடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் உரிமையாளர்கள் தென்னாப்பிரிக்க டி20 லீக்கின் ஆறு பிரான்சைஸ்களின் உரிமையாளர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தியாவை போலவே கிரிக்கெட் விளையாட்டை அதிகம் நேசிக்கும் தென்னாப்பிரிக்க நாட்டில் மும்பை இந்தியன்ஸ் பாணி கிரிக்கெட்டை கொண்டு செல்வதில் மகிழ்ச்சி" என இதனை உறுதி செய்யும் விதமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீட்டா அம்பானி சொல்லியுள்ளார். இதற்கு முன்னர் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய வீரர்களை வெளிநாட்டு கிரிக்கெட் லீக் தொடர்களில் பங்கேற்று விளையாட அனுமதி அளிக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முடிவு அணி உரிமையாளர்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இப்போதைக்கு களத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் போன்ற லீக் தொடரில் பங்கேற்று விளையாட பிசிசிஐ அனுமதிக்கவில்லை. இருந்தாலும் விதிகளில் சில திருத்தங்கள் செய்யலாம் என சொல்லப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT