Published : 18 Apr 2024 04:03 PM
Last Updated : 18 Apr 2024 04:03 PM

“தோனியை சமாதானம் செய்ய முடியாது; தினேஷ் கார்த்திக் ஓகே!” - ரோகித் சர்மா

முலான்பூர்: "டி20 உலகக் கோப்பையில் தோனியை சமாதானப்படுத்தி விளையாட வைப்பது எளிதல்ல. அவர் சோர்வாக உள்ளார். எனினும் தோனி வெஸ்ட் இண்டீஸ் வருவாரா என்பது தெரியாது" என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ரோகித் சர்மாவுக்கு இது 250-வது ஐபிஎல் போட்டி ஆகும். தோனிக்கு பிறகு 250-வது ஐபிஎல் போட்டியில் விளையாடும் இரண்டாவது வீரர் ரோகித் சர்மாதான்.

இந்த நிலையில் கில்கிறிஸ்ட் மற்றும் வாஹன் இணைந்து நடத்தி வரும் பாட்கேஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ரோகித் சர்மா பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். தோனி குறித்து பேசியபோது, "தற்போதையை சீசனில் தோனி, தினேஷ் கார்த்திக் இருவரும் பேட்டிங் செய்த விதம் என்னை கவர்ந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது.

அதேபோல், கடைசி நான்கு பந்துகளுக்கு விளையாட வந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் தோனி. கடைசி நான்கு பந்துகளில் அவர் ஆடிய ஆட்டம் வித்தியாசமாக இருந்தது. டி20 உலகக் கோப்பையில் தோனியை சமாதானப்படுத்தி விளையாட வைப்பது எளிதல்ல. அவர் சோர்வாக உள்ளார். எனினும் தோனி வெஸ்ட் இண்டீஸ் வருவாரா என்பது தெரியாது.

ஆனால் நிச்சயம் அமெரிக்கா வருவார் என்று நினைக்கிறேன். ஏனெனில், அண்மை காலங்களில் அதிகமாக கோல்ஃப் விளையாட்டில் ஆர்வமாக உள்ளார். அதனால் அமெரிக்கா வருவார் என்று நினைக்கிறேன். தோனியை சமாதானப்படுத்துவதை விடவும் தினேஷ் கார்த்திக்கை சமாதானம் செய்வது எளிது" என்று தெரிவித்தார்.

ரிஷப் பந்த் குறித்து... - ரிஷப் பந்த் குறித்து பேசிய ரோஹித் சர்மா, "என்னை சிரிக்க வைக்க ரிஷப் பந்தால் மட்டுமே முடியும். அவர் மிகவும் ஜாலியானவர். சிறிய வயதில் இருந்தே அவரை பார்த்து வருகிறேன். விபத்தினால் ஒன்றரை வருடம் அவரால் கிரிக்கெட் விளையாட முடியாமல் போனது எனக்கு மிகுந்த வருத்தமளித்தது. ரிஷப் தற்போது மீண்டும் களத்துக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜாலியாக இருக்க வேண்டும் என்றால் நான் ரிஷப்பை தான் அழைப்பேன். அவர் ஏதாவது பேசுவார், நாங்கள் அனைவரும் அதைக் கேட்டு சிரிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x