Published : 17 Oct 2023 04:19 PM
Last Updated : 17 Oct 2023 04:19 PM

“உங்க அப்பா சொல்லித் தரவில்லையா?” - கவாஸ்கர் கேள்விக்கு மிட்செல் மார்ஷின் சூப்பர் பதில்!

லக்னோ: லக்னோவில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கையை ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. பவுலிங்கில் ஆடம் ஜம்பா, கமின்ஸ், ஸ்டார்க் சிறப்பாக செயல்பட்டனர். அதேபோல், பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ் 51 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 52 ரன்களை விளாசினார். இவரது ஆட்டம் ஆஸ்திரேலிய வெற்றியின் ஒரு பளீர் அம்சம். ஏனெனில் மற்றபடி ஆஸ்திரேலியாவின் வெற்றி ஆஸ்திரேலிய வெற்றி போலவே இல்லை என்பதுதான் விஷயம்.

மிட்செல் மார்ஷ் 39 பந்துகளில் அரைசதம் கண்டார். ஆனால் கட் ஷாட்டில் ஒரு பந்தை டீப் பாயின்டில் தட்டி விட்டு சமிக கருணரத்னே த்ரோ பவரை குறைவாக எடைபோட்டு 2வது ரன்னிற்கு ஓடினார். ஆனால் சமிகாவின் த்ரோ துல்லியமாக வர, மெண்டிஸ் பந்தைப் பிடித்து ரன் அவுட் செய்தார். மார்ஷ் அவுட் ஆனது இலங்கைக்கு பெரிய நிம்மதியைக் கொடுத்தது. காரணம், பவர் ஷாட்களாக ஆடிக்கொண்டிருந்தார் மார்ஷ்.

போட்டி முடிந்ததும், மார்ஷ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரின் சரவெடி பேட்டிங் குறித்து வேடிக்கையான உரையாடலில் ஈடுபட்டனர். இவரது தந்தை ஜெஃப் மார்ஷெல்லாம் இப்போது ஆடினால் அவரை ‘பூமர்’ என்று ட்ரால் செய்து விடுவார்கள். ஏனெனில் அவர் 117 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆடி 55.03 என்ற ஸ்ட்ரைக் ரேட்டைத்தான் வைத்திருந்தார். ஆனால் மகன் மிட்செல் மார்ஷின் ஸ்ட்ரைக் ரேட் 93.85. இந்த நேரத்தில் இன்னொன்றையும் கூற வேண்டும். அன்று ஜெஃப் மார்ஷ்-டேவிட் பூன் பார்ட்னர்ஷிப் பல போட்டிகளை ஆஸ்திரேலியாவுக்கு வென்று கொடுத்துள்ளது என்பதையும் மறந்து விடலாகாது.

சுறுசுறுப்பான வீரராக சுனில் கவாஸ்கர் இருந்த நாட்களில் ஜெஃப் மார்ஷ் உடன் விளையாடியிருக்கிறார். அதனால் தந்தை-மகன் இருவரின் வித்தியாசமான அணுகுமுறையை கவாஸ்கரால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. இதனையடுத்து மிட்செல் மார்ஷிடம் உரையாடிய சுனில் கவாஸ்கர் டிபென்ஸ் ஆடுவது போல் செய்கை செய்து, “உங்கள் அப்பா இப்படி ஆட உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கவில்லையா? ஏனெனில் நீங்கள் ஆடுவதெல்லாம் ‘பேங்.. பேங்... பேங்...’ முறையில்தான் என்றார். கவாஸ்கர் கேள்வியின் நட்பார்ந்த கேலியைப் புரிந்து கொண்ட மிட்செல் மார்ஷ், “என் தந்தையின் மோசமான ஸ்ட்ரைக் ரேட்களை நான் தான் இப்போது சரிகட்டி வருகிறேன்” என்றார்.

சமிக கருணரத்னேவிடம் ரன் அவுட் ஆனது குறித்து மிட்செல் மார்ஷ் கூறியபோது, “என்னை உசைன் போல்ட் என்றுதான் நண்பர்கள் அழைப்பார்கள். அதாவது ஓடி ரீச் செய்து விடலாம் என்று நினைக்கிறோம், சில வேளைகளில் அது நடப்பதில்லை. எங்களுக்கு இது ஒரு நல்ல போட்டி. இந்தப் போட்டிக்கு வரும்போது கொஞ்சம் அழுத்தத்துடன் தான் வந்தோம். ஆனால் ஒரு முழுமையான செயல்திறனை வெளிப்படுத்தினோம். நிறைய காயமடைந்தோம். நல்ல தொடக்கம் வேண்டுமென்றுதான் இங்கு வந்தோம். ஏனெனில் நல்ல அணிகளுடன் இதற்கு முன்பு ஆடியிருக்கிறோம் என்பதால். இந்தப் போட்டி நல்ல ஒரு போட்டியாக அமைந்துள்ளது. பார்ப்போம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x