Published : 13 Oct 2023 04:08 PM
Last Updated : 13 Oct 2023 04:08 PM
உலகக் கோப்பை 2023 தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கிய ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா போட்டியில் ஆஸ்திரேலியா எந்தவித போராட்டமும் இல்லாமல் சரண்டர் ஆனது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் முதலில் பேட் செய்து தவறிழைத்த பாட் கம்மின்ஸ் நேற்று டாஸ் வென்று முதலில் தென் ஆப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்தும் தவறிழைத்தார். இந்த இரு தவறுகளும் கம்மின்ஸுக்கு பாடம் கற்பிக்க தவறவில்லை. இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவை சாத்தி எடுத்து விட்டது.
என்ன சோடை போனாலும் ஆஸ்திரேலிய பீல்டிங் சோடை போகாது. ஆனால் அதுவும் நேற்று பாகிஸ்தான் அணியின் மோசமான பீல்டிங்க்கு சவால் அளிக்கும் விதமாக அமைந்தது. ஆஸ்திரேலிய பீல்டர்கள் நேற்று 7 கேட்ச்களை தவறவிட்டனர். இதுபோன்ற தவறுகளால் 311 ரன்கள் இலக்கை விரட்டும் போது 43 ரன்கள் எடுப்பதுக்குள்ளாகவே 6 விக்கெட் என்று தடுமாற்றத்தை உச்சிக்கே சென்றுவிட்டனர். போதாக்குறைக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடுவர்களும் விளையாடினர். ஸ்டீவ் ஸ்மித்துக்கு வழங்கிய எல்.பி.டபிள்யு தீர்ப்பைப் போல் ஒரு மோசமான தீர்ப்பு இருக்க முடியாது. அதேபோல் மார்கஸ் ஸ்டாய்னிஸ் கேட்ச் நிச்சயம் அவுட் அல்ல. இரு தடவையும் ககிசோ ரபாடாவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், ஸ்கை ஸ்போர்ட்ஸில் தோல்வி குறித்து கூறியதாவது: “இந்தப் போட்டியிலிருந்து என்ன பாசிட்டிவ்களை ஆஸ்திரேலியா எடுத்துக் கொள்ள முடியும்? அணித் தேர்வு சரியில்லை. முதலில் அலெக்ஸ் கேரியை ஏன் உலகக் கோப்பை தொடருக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஒரு போட்டியில் ஆட செய்துவிட்டு அவரை ஏன் நீக்க வேண்டும்?.
இதனால் ஜோஷ் இங்லிஷை மட்டம் தட்டுகிறேன் என்பதல்ல. எனக்கு அவரை அதிகம் தெரியாது. ஆனால் அவரைப்பற்றி நிறைய பேர் என்னிடம் அவர் திறமையானவர் என்று கூறியுள்ளனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரது விக்கெட் கீப்பிங் நேற்று மோசமாக இருந்தது. அவர் பந்துகளை பிடிக்காமல் தவறவிட்டதையும் பார்த்தோம். ஆனால் எது பேசினாலும் நான் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும்.
விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரி சிறந்தவர்தான். அவரை அழைத்துச் சென்று விட்டு ஒரு போட்டிக்கு பிறகு ஏன் நீக்க வேண்டும்? இப்போது மீண்டும் அவரைக் கொண்டு வருவார்களா? இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியை பார்த்துவிட்டு பேசாமல் போக முடியாது. அதாவது, அலெக்ஸ் கேரி மட்டும்தான் பிரச்சினை என்பது போல் அவரை நீக்கிவிட்டால் போதுமென்று நினைத்ததுதான் எனக்குப் பிடிக்கவில்லை.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக்கப்பட வேண்டும் என்று என்னைப் போல் வேறு ஒருவரும் பாட் கம்மின்ஸுக்காக வாதாடியிருக்க முடியாது. ஆனால், நேற்று உத்தி ரீதியாக பல தவறுகளை இழைத்தார் கம்மின்ஸ். டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார். ஆனால் ஆக்ரோஷமாக ஆடவில்லை. அவர் விக்கெட்டுகளை எடுக்கப் பார்க்கவில்லை. நான் என் மூச்சை இதில் விரயம் செய்து கொண்டிருக்கிறேன் என்றே கருதுகிறேன். எதிரணியின் ரன் ரேட் அதிகரிப்பைக் குறைக்க ஒரேவழி விக்கெட்டுகளை எடுப்பதுதான். விக்கெட்டுகளை வீழ்த்த முயலாமல் ரன்களை மட்டுப்படுத்த முடியாது.
முதல் 10 ஓவர்களில் பாட் கம்மின்ஸ் ஏன் பந்து வீசவில்லை. மேக்ஸ்வெல் வீசும்போது இடது கை வீரருக்கு ஸ்லிப் வைக்கவில்லை. வலது கை பேட்டருக்கு பார்வர்ட் ஷார்ட் லெக் பேட் கேட்ச் பீல்டரை ஏன் நிறுத்தவில்லை? ஆகவே, அவர் விக்கெட்டுகளை வீழ்த்த நினைக்கவேயில்லை. கம்மின்ஸ் கேப்டனாக இருப்பதை விரும்புபவன் நான். ஆனால் அதில் அவர் சரியாக சிந்திக்கத் தவறுகிறார்.
மாறாக, தென் ஆப்பிரிக்கா அறிவுபூர்வமாக ஆடியது. ஆட்டத்தை நன்றாகக் கணித்தனர். ஹாசில்வுட், ஸ்டார்க்கை நன்றாக ஆடிவிட்டு அதன் பிறகு அடிக்கத் தொடங்கினர். இதனால் ஆஸ்திரேலியா அவ்வளவுதான் என்று நான் கூறவில்லை. அந்த கண்டிஷனில் இலங்கைக்கு எதிராக ஆடுவதுமே கடினம். பாகிஸ்தானுடன் இருக்கிறது. ஆகவே நாம் சரியாக ஆடவில்லை எனில் தொடரை வெளியேற வேண்டியதுதான்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவே இப்படி ஆடுகிறோம் என்றால் துணைக்கண்ட அணிகளின் ஸ்பின்னுக்கு எதிராக நம்மை பார்த்து இந்த உலகமே சிரிக்கும்” என்றார் மைக்கேல் கிளார்க்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT