Published : 29 Dec 2022 03:59 AM
Last Updated : 29 Dec 2022 03:59 AM
சென்னை: ‘சங்கரா’ தொலைக்காட்சியில் ஜனவரி 7 முதல் ‘பெரியவா’ எனும் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.
கடந்த 14 ஆண்டுகளாக ஆன்மிகம், கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது சங்கரா தொலைக்காட்சி. இந்தத் தொலைக்காட்சியில் ஜன.7 முதல் காஞ்சி காமகோடி சங்கர மடத்தின் 68-வது பீடாதிபதி காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புதிய தொடரான `பெரியவா'வின் தொடக்க விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள `சங்கராலயம்' வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
விழாவைத் தொடங்கிவைத்து பத்மா சுப்ரமணியம் பேசியதாவது: சங்கரா டிவி மூலமாக காமகோடி குடும்பம் இங்கே சேர்ந்திருக்கிறது. ஜனரஞ்சகமாகவும் ஆத்மானுபவமாகவும் `பெரியவா' குறித்த தொடரை உருவாக்குவதற்கு சங்கரா டிவிக்கு பெரியவாவின் ஆசி இருந்திருக்கிறது.
தலைமுறை தலைமுறையாக பெரியவாவின் அருள் தொடர்கிறது என்பது நிதர்சனமான உண்மை. தலாய் லாமா ஒரு பேட்டியில் நாங்களெல்லாம் பெரிய சன்யாசிகள் அல்ல, காஞ்சி பெரியவர்தான் பெரிய சன்யாசி என்று கூறியிருக்கிறார். பெரியவாவின் அருட் கருணை நம் எல்லோருக்கும், சங்கரா டிவியின் இந்தத் தொடரின் மூலம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
`பெரியவா' தொடரின் இயக்குநர் பாம்பே சாணக்யா பேசும்போது, ‘‘அடுத்த தலைமுறைக்கு பெரியவாவின் கருத்துகளை, தத்துவங்களை கொண்டு செல்வதுதான் இந்தத் தொடரின் நோக்கம். தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே வளரும் கதையாக இந்தத் தொடரை உருவாக்கியுள்ளோம். பெரியவாவின் உபதேசங்கள் தற்போதைய வாழ்க்கைக்கும் எப்படிப் பொருந்துகிறது என்பதை புரியவைக்க முயன்றிருக்கிறோம்.
நான்கு தலைமுறைகளின் வழியாகப் பயணிக்கும் கதையில் 80 வயது பெரியவாவாகத் தோன்றுபவர் முத்துவெங்கட்ராமன். 30 வயது பெரியவாவாகத் தோன்றுபவர் ராகவன். 13 வயது பால பெரியவாவாகத் தோன்றுபவர் வருண். பெரியவாவின் வாழ்க்கையை எளிதில் விளக்கவோ, வரையறைக்குள் கொண்டுவரவோ முடியாது. இப்போதைக்கு 26 வாரத்துக்குதொடரை எடுத்திருக்கிறோம். இதுமேலும் விரிவடையக் கூடும்’’ என்றார்.
நிகழ்ச்சியில் வயலின் கலைஞர் குமரேஷ், வீணை கலைஞர் ஜெயந்திகுமரேஷ், ஆன்மிக சொற்பொழிவாளர் கணேஷ சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரேவதி சங்கரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT