Published : 27 Dec 2022 05:41 AM
Last Updated : 27 Dec 2022 05:41 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 99 | ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்

முனைவர் கே.சுந்தரராமன் 

108 வைணவ திவ்ய தேசங்களில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், 99-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் மூலவர் வடபத்ரசாயி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டாளின் அவதாரத் தலமான இத்தலத்தை பெரியாழ்வார், ஆண்டாள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

பெரியாழ்வார் பாசுரம்:

மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல் மேல் நுழைந்த வண்டு

இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்

என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவளைப் பெற்ற வயிறுடையாள்

என்னும் வார்த்தை எய்து வித்த இருடீ கேசா முலையுணாயே.

(133 – பெரியாழ்வார் திருமொழி 2-2-6)

மூலவர்: வடபத்ரசாயி, ரங்கமன்னார் | தாயார்: ஆண்டாள் (கோதை நாச்சியார்) | தீர்த்தம்: திருமுக்குளம், கண்ணாடித் தீர்த்தம் | விமானம்: விமலாக்ருதி விமானம்

தல வரலாறு: ஸ்ரீவில்லிபுத்தூரில் வைணவ சான்றோர் பெரியாழ்வாரின் மகளாக வளர்க்கப்பட்டவர் கோதை நாச்சியார். நந்தவனத்தில் இருந்து பூக்களைப் பறித்து இறைவனுக்கு மாலையாக சூட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் பெரியாழ்வார். அவர்வழியில் கோதையும் அவ்வாறே செய்து வந்தார். பூக்களை இறைவனுக்கு மாலையாகக் கட்டி, முதலில் தன் கூந்தலில் சூடி, அவருக்கு தாம் பொருத்தம் உடையவளா என்பதை கண்ணாடியில் கண்டு களிப்பதை தினமும் செய்து வந்தார் கோதை நாச்சியார். மீண்டும் பூக்களைக் களைந்து பூஜைக்கு கொடுத்து விடுவார். பெரியாழ்வாரும் தினமும் அந்த மாலையையே இறைவனுக்கு அணிவிப்பார்.

ஒருநாள் மாலையில் தலை முடி இருப்பதைக் கண்டு, அதை ஒதுக்கிவிட்டு வேறு மாலையை பெருமாளுக்கு சூட்டியதும், கோதை சூடிக் கொடுத்த மாலையே தமக்கு வேண்டும் என்று பெருமாள் ஆழ்வாரிடம் கூறினார். கோதை நாச்சியார் இறைவனை நினைத்து தினம் வேண்டியபடி இருக்க, பெரியாழ்வாரும் இறைவனின் வார்த்தைக்காகக் காத்திருந்தார். பெருமாள் தாம் கோதையை நேசிப்பதாகவும், அவரை பூப்பல்லக்கில் அழைத்துக் கொண்டு திருவரங்கம் வருமாறும் பெரியாழ்வாரிடம் கூற, பெரியாழ்வாரும் அவ்வாறே செய்தார்.

ஸ்ரீரங்கம் சென்று இறைவனோடு ஐக்கியமானார் கோதை நாச்சியார். ஸ்ரீவில்லிபுத்தூரிலும் கோதையோடு சேர்ந்து எழுந்தருள வேண்டும் என்று பெரியாழ்வார் இறைவனிடம் பிரார்த்திக்க, அதன்படி பெருமாளும் ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுந்தருளினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்: முன்பொரு காலத்தில் இப்பகுதி வராக ஷேத்ரம் என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள காட்டில் வில்லி, கண்டன் ஆகிய குறவர்கள் வசித்து வந்தனர். ஒருநாள் இருவரும் வேட்டைக்குச் செல்லும்போது, புலியால் கண்டன் உயிரிழக்கிறான். இதை அறியாத வில்லி தன் தம்பியைத் தேடி அலைந்து, ஒரு மரத்தடியில் கண்ணயர்கிறான். அவன் கனவில் தோன்றிய பெருமாள், கண்டன் உயிரிழந்த தகவலைத் தெரிவிக்கிறார்.

மேலும், காலநேமி என்ற அசுரனை வதம் செய்ய இப்பகுதியில் எழுந்தருளியுள்ளதாகவும், ஆலமரத்தடியில் வடபத்ரசாயி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கப் போவதாகவும் தெரிவித்தார். காட்டுப் பகுதியை அழித்து நகரமாக மாற்றி, அதில் தனக்கு கோயில் எழுப்பி ஆராதனை செய்யும்படி பெருமாள் கூறியதையடுத்து, இந்த ஊருக்கு ‘ஸ்ரீவில்லிபுத்தூர்’ என்ற பெயர் கிட்டியது.

எண்ணெய்க் காப்பு: மார்கழி மாதம் ஆண்டாளுக்கு எண்ணெய்க் காப்பு உற்சவம் (8 நாள்) நடைபெறும். இதற்காக 61 வகை மூலிகைகள் அடங்கிய தைலம் பயன்படுத்தப்படுகிறது. இதை 40 நாட்கள் காய்ச்சுவர். நல்லெண்ணெய், பசும்பால், நெல்லிக்காய், தாழம்பூ, இளநீர் முதலான பொருட்கள் சேர்த்து ஏழுபடி எண்ணெய்விட்டு இரண்டு பேர் 40 நாட்கள் காய்ச்சுவர். மார்கழி மாதம் முடிந்ததும், இந்த தைல பிரசாதம் பக்தர்களுக்கு வழக்கப்படும். நோய் தீர்க்கும் அருமருந்தாக இந்தத் தைலம் கருதப்படுகிறது.

கோயில் அமைப்பும் சிறப்பும்: விமலாக்ருதி விமானத்தின் கீழ் ஆலமரத்தடியில் ஆதிசேஷன் மீது ஸ்ரீதேவி, பூதேவி அருகில் இருக்க சயன கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். மூலவரைச் சுற்றி, மூன்று பக்கங்களிலும் வர்ணம் தீட்டப்பட்ட கருடன், சேனை முதலியார், சூரியன், தும்புரு நாரதர், சனத்குமாரர், வில், கதை, சக்கரம், சங்கு பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து உண்டான பிரம்மதேவர், வாள் சனகர், கந்தர்வர்கள், சந்திரன், மது கைடபர், பிருகு முனிவர், மார்கண்டேய முனிவர் உருவங்கள் உள்ளன.

இத்தல கோபுரம் தமிழக அரசின் சின்னமாக அமைந்துள்ளது. உற்சவர் பேண்ட், சட்டை அணிந்தபடி அருள்பாலிக்கிறார். ரங்கமன்னார் சுவாமியின் வலது கையில் பெந்துகோல் (தற்காப்பு கோல்) இடக்கையில் செங்கோல், இடுப்பில் உடைவாள், காலில் காலணி அணிந்து ராஜகோலத்தில் இருப்பதைக் காண கண் கோடி வேண்டும். ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் மூவரும் ஒரே ஸ்தானத்தில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு.

இக்கோயில் தேரில் மிகச் சிறந்த தொழில் நுட்பத்துடன் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. திருப்பதியில் (புரட்டாசி 3-வது சனிக்கிழமை) பிரம்மோற்சவத்தின்போது பெருமாளுக்கு ஆண்டாள் மாலை அணிவிக்கப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு திருப்பதியில் இருந்து திருமணப் பட்டுப்புடவை வரும். மதுரை சித்திரை விழாவின்போது அழகர் எதிர் சேவையின்போது, ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, கள்ளழகருக்கு அணிவிக்கப்படுகிறது.

ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பெருமாளை வேண்டி திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களை இயற்றினார். இதில் திருப்பாவை 30 பாசுரங்களையும், நாச்சியார் திருமொழி 143 பாசுரங்களையும் கொண்டு அமைந்துள்ளன.

திருவிழாக்கள்: ஆடிப் பூரத் திருவிழா 10 நாள், புரட்டாசி பெரிய பெருமாள் உற்சவம், 10 நாள், பங்குனி திருக்கல்யாண உற்சவம், 10 நாள், மார்கழி எண்ணெய்க் காப்பு, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, தமிழ், ஆங்கில வருடப் பிறப்பு, தீபாவளி, பொங்கல் தினங்களில் சுவாமி, ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும்.
திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வி ஞானம், வியாபார விருத்தி, குடும்ப ஐஸ்வர்யம், விவசாய செழிப்புக்கு இத்தல பெருமாள் அருள்புரிவார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x