108 வைணவ திவ்ய தேச உலா - 59 | திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில்

108 வைணவ திவ்ய தேச உலா - 59 | திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில்
Updated on
3 min read

திருவள்ளூர் மாவட்டம் வீரராகவ பெருமாள் கோயில் திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் 59-வது திவ்ய தேசம் ஆகும். இத்தல மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே திருமஞ்சனம் நடைபெறும்.

இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். திருமழிசை பிரான், வேதாந்த தேசிகரும் இத்தலம் மீது பாடல்கள் புனைந்துள்ளனர்.

திருமங்கையாழ்வார் பாசுரம்:

தையலான் மேல் காதல் செய்த தானவன் வாள் அரக்கன்

பொய் இலாத பொன்முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று

செய்த வெம்போர் தன்னில் அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள

எய்த வெந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே

(1059 – பெரிய திருமொழி 2-2-2)

மூலவர்: எவ்வுள்கிடந்தான் (வீரராகவ பெருமாள்)

உற்சவர்: வைத்திய வீரராகவர்,

தாயார்: கனகவல்லி

தீர்த்தம்: ஹிருதாபநாசினி

ஆகமம்: பாஞ்சராத்ரம்

விமானம்: விஜயகோடி விமானம்

புரு என்ற முனிவர் செய்த யாகத்தின் பயனாக சாலிஹோத்ரர் என்ற முனிவர் பிறந்தார். சாலிஹோத்ரர் இத்தலம் அருகே இருக்கும் குளக்கரையில் ஒரு வருடம் தவம் இருந்தார். ஒரு நாள் (தை மாதம்) தனது பூஜைகளை முடித்துவிட்டு மாவை சுவாமிக்கு நைவேத்யம் செய்தார். அதில் ஒரு பங்கை எடுத்து வைத்துவிட்டு மற்றொரு பங்கை தான் உண்பதற்காக வைத்திருந்தார். (பொதுவாக அதிதிக்கு உணவளித்துவிட்டுதான் அவர் உண்பது வழக்கம்) அப்போது ஒரு வயதான அந்தணர் வந்து உணவு கேட்டார். உடனே ஒரு பங்கைக் கொடுத்தார். முதியவர் தனக்கு இன்னும் பசி தீரவில்லை என்று கூற, மற்றொரு பங்கையும் அவருக்கே கொடுத்துவிடுகிறார் முனிவர்.

அன்று முழுவதும் உபவாசம் இருந்துவிட்டு அடுத்த நாள் முதல் ஒரு வருடம் மீண்டும் தவத்தில் ஆழ்கிறார். ஒரு வருடம் கழித்து இதே போல் பூஜைகளை முடித்துவிட்டு மாவை, சுவாமிக்கு நைவேத்யம் செய்கிறார். ஒரு பங்கை எடுத்து வைத்து விட்டு, மற்றொரு பங்கை, தான் உண்பதற்காக வைத்திருந்தார். யாரேனும் அதிதி வருகிறார்களா என்று பார்த்தார். அப்போது ஒரு வயதான அந்தணர் வந்து உணவு கேட்டார். இவரும் மகிழ்ச்சியாக அந்த மாவைக் கொடுத்தார். முதியவர் உணவை உண்டுவிட்டு படுத்து உறங்க வேண்டி “எவ்வுள்” என்று கேட்டார்.

முனிவரும் தான் படுத்து உறங்கும் இடத்தைக் காட்டி, அவ்விடத்தில் படுத்து உறங்குமாறு அவரை கேட்டுக் கொண்டார். அடுத்த கணமே முதியவர் வடிவத்தில் வந்த திருமால் சயன கோலத்தில் காட்சி அளித்தார். முனிவருக்கு எல்லையில்லா ஆனந்தம். பெருமாளும் முனிவருக்கு வரம் அளிப்பதாக உறுதி அளித்தார். முனிவரும் இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரது பிரச்சினைகளையும் தீர்த்து அருள்பாலிக்கும்படி வேண்டினார். பெருமாளும் அவ்வண்ணமே அருளி இத்தலத்தில் எழுந்தருளினார். அதனால் இத்தலத்துக்கு எவ்வுள் என்றும், இத்தல பெருமாளுக்கு எவ்வுட்கிடந்தான் என்றும் பெயர் வழங்கலாயிற்று.

தர்மசேனர் என்ற அரசருக்கு மகளாக ஸ்ரீதேவித் தாயார் வசுமதி என்ற பெயரில் அவதரித்தார். வசுமதியும் திருமணப் பருவத்தை அடைந்தாள். அப்போது ஒரு நாள் வீரநாராயணன் என்ற பெயரில் வேட்டைக்குச் சென்ற பெருமாள் வசுமதியை மணமுடித்தார். இந்த திருமணத்துக்குப் பிறகுதான் பெருமாளின் பெயர் மாறிற்று. அதுவரை கிங்கிருஹேசன் என்ற பெயராலேயே அழைக்கப்பட்டார்.

இத்தலம் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. ஐந்தடுக்கு ராஜகோபுரம் உள்ள இத்தலம் 5,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. இத்தல மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே திருமஞ்சனம் நடைபெறும். 15 அடி நீளம், 5 அடி உயரத்தில் பெருமாள் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். மார்க்கண்டேய புராணத்தில் இத்தலம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தல விமானம் விஜயகோடி என்றும் வனம் விஷாரண்யம் என்றும் அழைக்கப்படுகின்றன.

கனகவல்லி தாயார், கணேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகன், உடையவர், கோதண்ட ராமர் ஆகியோர் தனிசந்நிதியில் அருள்பாலிக்கின்றனர். லட்சுமி நரசிம்மர், சக்கரத் தாழ்வார் சந்நிதிகளில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் காணப்படும்.

தை பிரம்மோற்சவம், சித்திரை பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும். தை அமாவாசை, தமிழ், ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், சனிக்கிழமை தினங்களில் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும்.

இத்தலத்தில் உள்ள குளம் (தீர்த்தம்) கங்கையைவிட புனிதமானது என்று கூறப்படுகிறது. இந்த ஹிருதாபநாசினி தீர்த்தத்தில் நீராடினால், மனதால் நினைத்த பாவங்கள் அனைத்தும் விலகும். என்பது நம்பிக்கை. நோய் தீர்க்கும் திருக்குளமாக இக்குளம் அழைக்கப்படுகிறது. அவ்வண்ணமே இத்தல பெருமாளும் வைத்திய வீரராகவப் பெருமாளாக அழைக்கப்படுகிறார்.

3 அமாவாசைகளுக்கு பெருமாளிடம் வேண்டிக் கொண்டால் தீராத நோயும் (வயிற்று வலி, கைகால் நோய், காய்ச்சல்) குணமாகும் என்பது நம்பிக்கை. தடைபட்ட திருமணம் நடைபெற, குழந்தை பாக்கியம் பெற, அனைத்து கவலைகளும் நீங்கி சகல ஐஸ்வர்களையும் பெற இத்தல பெருமாள் அருள்பாலிப்பார். உடலில் உள்ள மரு, கட்டி நீங்க தீர்த்தக் குளத்தில் பால், வெல்லம் சேர்ப்பது வழக்கம். கோயில் மண்டபத்தில் உப்பு, மிளகு சமர்ப்பிப்பதும் வழக்கம்.

நோய்களை வீரராகவர் குணப்படுத்துகிறார் என்றால், சிகிச்சையின்போது ஏற்படும் வலிகளையும் வேதனைகளையும் இத்தல தாயார் மெல்ல வருடிக் கொடுத்து ஆறுதல் படுத்துகிறார்.

அமைவிடம்: சென்னையில் இருந்து 47 கிமீ தூரத்தில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in