Published : 19 Nov 2022 06:35 AM
Last Updated : 19 Nov 2022 06:35 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 58.திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கோயில்

முனைவர் கே.சுந்தரராமன்

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் (திண்ணணூர்) பக்தவத்சலப் பெருமாள் கோயில் திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 58-வது திவ்ய தேசம் ஆகும். இத்தலத்தில் தாயார் சகல சௌபாக்கியங்களையும் அருளும் வைபவ லட்சுமியாக உள்ளார். ஆதிசேஷனுக்கு தனிசந்நிதி உள்ளது.

இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை

ஆற்றலை அண்டத் தற்புறத் துய்த்திடும் ஐயனைக் கையிலாழி ஒன்றேந்திய

கூற்றினை குருமாமணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை

காற்றினைப் புணலைச் சென்று நாடிக் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன்.

மூலவர்: பக்தவத்சலப் பெருமாள்,

உற்சவர்: பத்தராவிப் பெருமாள்

தாயார்: என்னைப் பெற்ற தாயார் (சுதாவல்லி)

தலவிருட்சம்: பாரிஜாதம்,

தீர்த்தம்: வருண புஷ்கரிணி

விமானம் : உத்பல விமானம்

ஆகமம் : பாஞ்சராத்ர ஆகமம்

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார், பல திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்து கொண்டு வந்தார். அப்படி தன்னுடைய யாத்திரையில் ஒரு நாள் இத்தலம் வழியாகச் சென்றார். ஆனால் இத்தலத்தின் மீது பாசுரம் பாடவில்லை. இதை அறிந்த சுதாவல்லி தாயார், பெருமாளிடம் இதுகுறித்து கூறி, திருமங்கையாழ்வாரிடம் இருந்து ஒரு பாசுரம் வாங்கி வருமாறு கூறினார். பெருமாளும் திருமங்கையாழ்வாரைத் தேடினார். ஆனால் அதற்குள் மாமல்லபுரம் அருகே உள்ள திருக்கடல்மல்லைக்குச் சென்றுவிட்டார்.

பக்தவத்சலப் பெருமாளும் கடல்மல்லை சென்று திருமங்கையாழ்வாரிடம் தன்னைப் பற்றி ஒரு பாசுரம் பாடும்படி கேட்டார். ஆழ்வாரும், ‘நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை நின்றவூர் நித்திலத் தொத்தூர் சோஅலை காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக் கண்டது நான் கடல் மல்லை தலசயனத்தே’ என்று பாடினார்.

எம்பெருமான் என் பாடல் கேட்டு வந்து நின்றதை நான் கண்டது கடல்மல்லையாகிய மாமல்லபுரத் திருத்தலத்தில் என்று பொருள்படும் திருமங்கையாழ்வார் பாசுரத்தின் மூலம் உலகையே காக்கும் திருமால் பக்தனின் பெருமையை உலகுக்கு உணர்த்த இவ்வாறு பாசுரம் பெற்றுச் சென்றார் என்பதை அறிய முடிகிறது. பாசுரம் பெற்று வந்த பக்தவத்சலப் பெருமாளைக் கண்ட தாயார், ஏனைய தலங்கள்மீது பத்து பாசுரங்கள் பாடியிருக்கும்போது, இத்தலத்துக்கு மட்டும் ஒன்றுதானா என்று வினவினார். உடனே பெருமாள் திருமங்கையாழ்வாரைத் தேடிச் சென்றார். ஆழ்வார் அதற்குள் திருக்கண்ணமங்கை சென்றுவிட்டார். திருக்கண்ணமங்கை பெருமாளை மங்களாசாசனம் செய்யும்போது திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் வந்து நிற்பதைக் கவனித்த திருமங்கையாழ்வார் அவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்தார்.

ஒருசமயம் திருமாலிடம் கோபித்துக் கொண்டு வைகுண்டத்தை விட்டு ‘திரு’ ஆகிய மகாலட்சுமி இத்தலத்தில் வந்து நின்றதால் ‘திருநின்றவூர்’ என்று ஆனது. அவளை சமாதானம் செய்ய சமுத்திரராஜன் வந்திருந்தார். மகாலட்சுமி அதற்கு சமாதானம் ஆகவில்லை. உடனே சமுத்திரராஜன் வைகுண்டம் சென்று,“தாங்களே திருநின்றவூர் சென்று தேவியை இங்கு அழைத்து வர வேண்டும்”என்று திருமாலிடம் கூறினார். பெருமாள் அவரை முன்னால் செல்லுமாறும், தான் பின்னே வருவதாகவும் கூறினார்.

சமுத்திரராஜன் இத்தலம் வந்து மகாலட்சுமியைப் பார்த்து, “பாற்கடலில் நீ பிறந்ததால் நான் உனக்கு தந்தையாக இருந்தாலும் இப்போது நீ என்னைப் பெற்ற தாயார், அதனால் உடனே நீ வைகுண்டம் செல்வாயாக” என்று கூறினார், பெருமாளும் வந்து மகாலட்சுமியை சமாதானம் செய்கிறார்.

மகாலட்சுமி வைகுண்டம் செல்கிறார். பக்தனின் வேண்டுகோளுக்கு இணங்க பெருமாள் இத்தலம் வந்ததால் பெருமாளுக்கு பக்தவத்சலன் என்ற பெயர் வழங்கலாயிற்று. சமுத்திரராஜனும் மகாலட்சுமியை என்னைப் பெற்ற தாயே என்றதால் அப்பெயரே நிலைத்துவிட்டது. சமுத்திரராஜனின் வேண்டுகோளுக்கு இணங்க பெருமாளும் தாயாரும் இத்தலத்தில் திருமண கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள்.

கோயிலின் ராஜகோபுரம் மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. பலீபீடம், கொடிமரம், கருட பகவான் சந்நிதி, மகா மண்டபம், உள் மண்டபம் ஆகியன சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. பக்தவத்சலப் பெருமாள் 11 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பஞ்சாயுதம் ஏந்தி ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்.

மூலவர் சந்நிதிக்கு வலது புறத்தில் தாயார் சந்நிதி அமைந்துள்ளது. சுற்றுப்பிரகாரத்தில் ஆண்டாள், ஆழ்வார்கள், சக்கரத்தாழ்வார், விஷ்வக்ஸேனர், ராமானுஜர், மணவாள மாமுனிகள், ஆஞ்சநேயர். ஏரி காத்த ராமர், ஆதிசேஷன் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.

குபேரன் ஒரு சமயம் தன் நிதியை இழந்து வாடியபோது இத்தல தாயாரை வழிபட்டு மீண்டும் அனைத்தையும் பெற்றான்.

திருவிழாக்கள்

பங்குனியில் திருவோண விழா, ஆழ்வார், ஆச்சாரியர் திருநட்சத்திரங்கள், சித்திரை பவுர்ணமி, திருக்கல்யாண உற்சவம், தீபாவளி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, மாசி மகம், ரத சப்தமி, தைப் பொங்கல் தினங்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் மற்றும் சுவாமி வீதியுலா நடைபெறும்.

ஆதிசேஷன் சந்நிதியில் புதன்கிழமைதோறும் நெய்விளக்கு ஏற்றி பால் பாயாசம் படைத்து அவருக்கு அர்ச்சனை செய்து வந்தால் ராகு-கேது மற்றும் சர்ப்ப தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. மாங்கல்ய பலனும் கிட்டும். திருமணத் தடையுள்ளவர்கள் இத்தலம் வந்து வழிபட்டால் அத்தடை நீங்கும்.

அமைவிடம்: சென்னையில் இருந்து 26 கிமீ தூரத்தில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x