

திருச்சி மாவட்டம் உத்தமர்கோவில் (கதம்பவனம், பிச்சாண்டவர் கோயில், திருக்கரம்பனூர்) புருஷோத்தம பெருமாள் கோயில் திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 3-வது திவ்ய தேசம் ஆகும். நான்முகன், திருமால், ஈசன் ஆகிய மும்மூர்த்திகளும் அருளும் தலம்.
திருமங்கையாழ்வார் (பெரிய திருமொழி) இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.
பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத்தண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
காரார் திண் கடல் ஏழு மலையேழுஇவ் வுலகேழுண்டு ஆராதென்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே
மூலவர்: புருஷோத்தமன்,
தாயார்: பூர்ணவல்லி, சவுந்தர்ய பார்வதி
தலவிருட்சம்: கதலி (வாழை),
தீர்த்தம்: கதம்ப தீர்த்தம்
விமானம்: உத்யோக விமானம்
தல வரலாறு
ஈசனைப் போலவே பிரம்மதேவனும் ஐந்து தலைகளுடன் இருந்தார். ஒருசமயம் ஈசன் என்று நினைத்து பிரம்மதேவனுக்கு பணிவிடைகள் செய்யத் தொடங்கினார் பார்வதிதேவி. இந்த சம்பவத்தால், இனியும் குழப்பம் வரக்கூடாது என்று எண்ணி ஈசன், பிரம்மதேவனின் ஐந்து தலைகளுள் ஒன்றைக் கிள்ளி எடுத்தார்.
இதனால் ஈசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதோடு மட்டுமல்லாமல் பிரம்மதேவருடைய கபாலமும் (மண்டை ஓடு) அவர் கையுடன் ஒட்டிக் கொண்டது. ஈசனுக்கு படைக்கப்பட்ட உணவு அனைத்தும் கபாலமே எடுத்துக் கொண்டது. பசியால் வாடினார் ஈசன்.
இதன் காரணமாக அந்த கபாலத்தையே யாசகம் வாங்கும் பாத்திரமாக ஏந்திக் கொண்டு பிட்சாடனர் கோலத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அப்போது ஒருநாள் இத்தலத்துக்கு வந்தபோது, திருமால், ஈசனின் பாத்திரத்தில் உணவு அளிக்கும்படி திருமகளிடம் கூறினார். திருமகளும் ஈசன் வைத்திருந்த கபாலத்தில் உணவிட்டாள். அதுவே பூரணமாக நிரம்பி ஈசனின் பசியைப் போக்கியது. இதனால் தாயார் ‘பூரணவல்லி’ என்ற பெயரைப் பெற்றார். திருமாலும் பள்ளி கொண்ட கோலத்தில் ஈசனுக்கு காட்சி தந்தார்.
பிரம்மதேவருக்கு பூலோகத்தில் தனக்கு ஒரு கோயில் இல்லை என்ற மனக்குறை இருந்தது. திருமால், பிரம்மதேவரை பூலோகத்தில் பிறக்கும்படி செய்தார். பிரம்மதேவரும் இத்தலத்துக்கு வந்து பெருமாளை வழிபட்டு தவம் செய்யத் தொடங்கினார். பிரம்மதேவரின் பக்தியை சோதிக்க எண்ணிய பெருமாள், கதம்ப மரத்தின் வடிவமாக அங்கு நின்று கொண்டார். இதை உணர்ந்த பிரம்மதேவர் கதம்ப மரத்துக்கு பூஜைகள் செய்து வழிபட்டார். பிரம்மதேவரின் பக்தியில் மகிழ்ந்த பெருமாள், பிரம்மதேவருக்கு காட்சி கொடுத்து எப்போதும்போல் இத்தலத்தில் இருந்து தன்னை வழிபட்டு வருமாறு கூறினார்.
மேலும் பிரம்மதேவருக்கு கோயில்கள் இல்லாவிட்டாலும் இத்தலத்தில் தனியாக பிரம்மதேவருக்கு வழிபாடு இருக்கும் என்று கூறினார் பெருமாள். பிரம்மாவும் இத்தலத்தில் தங்கினார். பிற்காலத்தில் பிரம்மதேவருக்கு சந்நிதி எழுப்பப்பட்டது.
பிரம்மதேவருக்கு இடதுபுறத்தில் ஞான சரஸ்வதி தனிசந்நிதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஞான சரஸ்வதியின் கையில் ஓலைச் சுவடி, ஜெபமாலை உள்ளது. பிரம்மதேவருக்கு தயிர் சாதம், ஆத்தி இலை படைத்தும் சரஸ்வதி தேவிக்கு வெள்ளை வஸ்திரம், தாமரை மலர் மாலை சாற்றியும் வழிபட்டால் ஆயுள் கூடும். கல்வி சிறக்கும். குருப்பெயர்ச்சி காலத்தில் பிரம்மதேவருக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும்.
இத்தல விமானத்தின் பெயர் உத்யோக விமானம். அதன் கீழ் கருவறையில் மூலவர் கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கிறார்கள். பூரணவல்லி தனிசந்நிதியில் சேவை சாதிக்கிறார். மகாலட்சுமிக்கும் தனிச்சந்நிதி உள்ளது.
பெருமாளுக்கு பின்புறத்தில் மேற்கு பார்த்தபடி ஈசன் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். இவர் பிரகாரத்தில் பிட்சாடனர் கோலத்தில் (உற்சவர்) அருள்பாலிக்கிறார்.
சிவன், பிட்சாடனாராக வந்து தன் தோஷம் நீங்கப்பெற்ற தலம் என்பதால் இவ்வூர் ‘பிச்சாண்டார் கோயில்' என்றும், திருமால் கதம்ப மரமாக நின்ற ஊர் என்பதால் ‘கதம்பனூர்' என்றும் ‘கரம்பனூர்' என்றும் அழைக்கப்படுகிறது. கணவனும், மனைவியும் இல்லற வாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதே உத்தமம். இவ்வாறு ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்பவர்களை உத்தமர் என்பர். இங்கு மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இத்தலத்தை ‘உத்தமர் கோயில்' என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.
ஈசன், பிரம்மதேவன், திருமால் ஆகிய மும்மூர்த்திகளும் தனித்தனி சந்நிதிகள் அவர்கள் துணையுடன் அருள்பாலிக்கின்றனர். ஒரே தலத்தில் மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்வது அபூர்வம்.
இத்தலம் சப்தகுரு தலம் என்று அழைக்கப்படுகிறது. சிவகுரு தட்சிணாமூர்த்தி, திருமாலின் குரு வரதராஜர். குரு பிரம்மா, சக்திகுரு சவுந்தர்ய பார்வதி, ஞானகுரு சுப்பிரமணியர், தேவகுரு வியாழன், அசுரகுரு சுக்கிராச்சாரியர் ஆகிய 7 குரு சுவாமிகளும் குருவுக்குரிய இடத்தில் இருந்து அருள்பாலிக்கின்றனர். குருபெயர்ச்சியின்போது அனைவருக்கும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும்.
திருவிழாக்கள்
கார்த்திகை தீபத் திருவிழாவின்போது மும்மூர்த்திகளுக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு ஒன்றாக விதியுலா வருகின்றனர். தைப்பூசத்தில் ஈசனுக்கும் மாசி மகத்தில் பெருமாளுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பெருமாளுக்கு சித்திரையிலும் ஈசனுக்கு வைகாசியிலும் தேர்த் திருவிழா நடைபெறும்.
திருமணத் தடை நீங்க, குழந்தை வரம் கிடைக்க, கிரக தோஷங்கள் விலக தம்பதியர் ஒற்றுமை சிறக்க இத்தல பெருமாளை வணங்குவது நன்மை பயக்கும்.
அமைவிடம்: திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து 8 கிமீ தொலைவிலும், ஸ்ரீரங்கத்தில் இருந்து 4 கிமீ தொலைவிலும் உள்ளது.